‘தி கேரளா ஸ்டோரி’ படம் பார்த்த இளம்பெண்… காதலன் மீது போலீசில் புகார்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அங்கு அண்மையில் வெளியான ‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தினை பார்த்த அம்மாநிலத்தைச் சேர்ந்த பெண் தனது காதலன் மீது காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் கஜ்ரானா பகுதியை சேர்ந்த இளம் பெண்ணுக்கும், முகமது பைசன் கான் என்ற நபரும் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் கோச்சிங் சென்டருக்கு படிக்க சென்ற போது அறிமுகமாகியுள்ளனர். அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
இருவரும் பல முறையில் பாலியல் உறவிலும் இருந்த நிலையில், சமீப காலமாக அந்த பெண்ணை காதலன் நீ மதம் மாறினால் தான் உன்னை திருமணம் செய்துகொள்வேன் என வற்புறுத்த தொடங்கியுள்ளார். இது அந்த பெண்ணுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது வீட்டாரிடம் கூறினால் தன் மீது அவர்கள் ஆத்திரமடைவார்கள் என பெண் பயத்துடன் அமைதியாக இருந்துள்ளார். இந்நிலையில், சில நாள்களுக்கு முன் இந்த பெண் திரையரங்கில் தி கேரளா ஸ்டோரி படத்தை பார்த்துள்ளார்.
அதன் பின் மனதில் தைரியத்தை வரவழைத்து அந்த பெண் தனது காதலனிடம் சென்று தன்னால் மதம் மாற முடியாது என்றுள்ளார். அப்போது அந்த பெண்ணை காதலன் பைசன் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அந்த பெண் கஜ்ரானா காவல்நிலையத்தில் தனது காதலன் மீது புகார் அளித்துள்ளார்.
காதலன் தன்னை மதம் மாற கட்டாயப்படுத்துகிறார், உளவியல் ரீதியாக கொடுமைப்படுத்துகிறார் எனவும் பெண் புகாரில் கூறியுள்ளார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறை மத்தியப் பிரதேச மதமாற்ற தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து காதலன் பைசனை கைது செய்துள்ளது.