எடப்பாடி பழனிசாமி உள்பட 5000 பேர் மீது வழக்குப்பதிவு…!
திமுக அரசின் முறைகேடுகள் குறித்து நடவடிக்கை எடுக்க கோரி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேரணியாக சென்று ஆளுநரை சந்தித்து மனு அளித்தார். முன்னதாக சென்னை சின்னமலையில் நடந்த கூட்டத்தில், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, தொடர் மின்வெட்டு, விஷச் சாராய மரணங்கள், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோ விவகாரம் உள்ளிட்ட திமுக ஆட்சியின் பல்வேறு முறைகேடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க கோரி கண்டன கோஷமிட்டனர்.
தொடர்ந்து ஆளுநர் மாளிகை நோக்கி அதிமுகவினர் பேரணியாக சென்றனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன். சி.வி.சண்முகம், ஜெயக்குமார், சி.விஜயபாஸ்கர் உட்பட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். திமுக ஆட்சிக்கு எதிரான பதாகைகளுடன், முழக்கமிட்டவாறு பேரணி சென்றனர்.
பேரணி ஆளுநர் மாளிகையை அடைந்ததும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் முக்கிய நிர்வாகிகள் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து திமுக அரசு மீது புகார் மனு அளித்தனர்.
இந்த நிலையில் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்திய எடப்பாடி பழனிசாமி உள்பட 5500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா மற்றும் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் மீதும் சட்டவிரோதமாக கூடுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் கூட்டம் சேர்த்தல் உள்பட 3 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.