யாழ். தனியார் வகுப்புகளுக்கு தடை? : மாணவர்களை கலை நிகழ்ச்சிகளுக்கு ஊக்கப்படுத்த வேண்டும் – அரச அதிபர்
ஞாயிற்றுக்கிழமைகளில் யாழில் நடைபெறும் தனியார் வகுப்புக்கள் தடைசெய்யப்பட்டு , அதில் பங்குபற்றும் மாணவர்களை கலைநிகழ்ச்சிகளில் பங்குபற்ற வைக்க வேண்டியுள்ளது என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரம் தெரிவித்துள்ளார்.
யாழ். இந்து வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அரசாங்க அதிபர் இதனைத் தெரிவித்தார்.
சிறுவர்கள் கையடக்கத் தொலைபேசிக்கு அடிமையாவதை எப்படியாவது தடுத்து அவர்களது எண்ணங்களை கலை நிகழ்ச்சிகளை நோக்கி வழிநடத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் பல்வேறு துஷ்பிரயோகங்களுக்கு பாடசாலை மாணவர்களும், தனியார் வகுப்பு மாணவர்களும் பங்களிப்பதாகவும், அதனை பாதிக்கும் முக்கிய காரணி கையடக்கத் தொலைபேசியே எனவும் யாழ்.ஆளுநர் தெரிவித்தார்.
இதன்படி, முதற்கட்டமாக ஞாயிற்றுக்கிழமைகளில் யாழ்ப்பாணம் முழுவதும் நடத்தப்படும் தனியார் வகுப்புகள் நிறுத்தப்படும் எனவும், இதற்காக யாழில் உள்ள தனியார் துறை ஆசிரியர்களுடன் விரைவில் கலந்துரையாடல் நடத்தப்படும் எனவும் மாவட்ட அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.
இவ் உத்தரவை மீறும் தனியார் ஆசிரியர்களை தண்டிக்கும் வழிமுறையொன்று தயாரிக்கப்படும் என அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.