தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு ஓராண்டு தடை
குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு ஓராண்டு தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா, மெல்லும் புகையிலைப் பொருட்கள் உள்ளிட்டவற்றிற்கு தடை விதித்து கடந்த 2018 ஆம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்பின் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்குத் தடை விதித்து, உணவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிற்கு தடை விதித்ததுடன், குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை தடை செய்வதற்கு புதிதாக அரசாணை வெளியிடவும் அனுமதியளித்தது.
அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் நிக்கோடின் மற்றும் புகையிலை அடிப்படையிலான குட்கா, பான் மசாலா, மெல்லும் புகையிலைப் பொருட்களை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் ஓராண்டுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு ஆணையர் புதிதாக அரசாணை பிறப்பித்துள்ளார்.