நினைவேந்தல் நிகழ்வுகளை எந்த இடத்திலும் நடத்த முடியும்! – ரணில் தெரிவிப்பு.
“கொழும்பு, பொரளையில் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை குழப்ப முயன்றதைக் கண்டிக்கின்றேன்” – என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நினைவேந்தல் நிகழ்வுகளை எந்த இடத்திலும் நடத்த முடியும். அதற்கு வடக்கு, கிழக்கு, தெற்கு என்று வேறுபாடு கிடையாது. போரில் இறந்தவர்களின் உறவுகள் எங்கெங்கெல்லாம் இருக்கின்றார்களோ அங்கெங்கெல்லாம் நினைவேந்த முடியும்.
கொழும்பில் அண்மையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வை ஒரு குழுவினர் இனவாத நோக்கத்தோடு தடுத்து நிறுத்த முற்பட்டதைக் கண்டிக்கின்றேன்.
பயங்கரவாதிகளை எவரும் எந்த இடத்திலும் நினைவேந்த முடியாது. ஆனால், போரில் இறந்த உறவுகளை அவர்களின் சொந்தங்கள் சுதந்திரமாக நினைவேந்த முடியும். அதைத் தடுத்து நிறுத்த நாட்டில் எந்தச் சட்டத்திலும் இடமில்லை.” – என்றார்.