பிடிபட்ட தங்கம் என்னுடையது அல்ல… மீடியாவிடம் கூறிய “தங்கம் சப்ரி”!
ஏழரை கோடி பெறுமதியான தங்கம் மற்றும் ஸ்மார்ட்ஃபோன்களை விமான நிலைய பிரமுகர் முனையத்தின் வழி கடத்த முற்பட்ட போது சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு 75 இலட்சம் ரூபா அபராதம் செலுத்தி விடுதலை செய்யப்பட்ட புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், தம்மீது தவறான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாகவும், பிடிபட்ட தங்கம் மற்றும் ஸ்மார்ட்போன்கள் தமக்குச் சொந்தமானது அல்ல’ என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தனக்குத் தெரிந்த நண்பரை நம்பி இந்த பழி தம்மீது வீழ்ந்ததாக தெரிவித்தார். தனக்குத் தெரியாமல் தனது பெயருக்கு களங்கப்படுத்திய தவறை தனது நண்பர் ஒப்புக்கொண்டதாகவும், அவர் தனது சொந்த கடவுச்சீட்டைப் பயன்படுத்தி அவரது பொருட்களை நாட்டிற்குள் கடத்த முயற்சித்ததே பிரச்சினைக்குக் காரணம் என்றும் அவர் கூறினார்.
“நேற்று நான் விமான நிலையத்தினூடாக வெளியே வந்தபோது, தங்கம் தொடர்பான பிரச்சனை ஏற்பட்டது. சில போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. உண்மையில், நான் அந்த தொலைபேசிகளையும் தங்கத்தையும் கொண்டு வரவில்லை. என்னை ஏழெட்டு வருடங்களாகத் தெரிந்த என்னுடைய ஆதரவாளர் அவர். நான் அந்த நபரை நம்பினேன்.”
“பிடிபட்ட பொருட்களோடு வந்தவரை ஏழெட்டு வருடங்களாக எனக்குத் தெரியும். அவரும் என்னுடன் சேர்ந்து வந்தார். அவனுடைய பேக்களும் என் போடிங்காட்டில் பதியப்பட்டது. அவருடைய பேக்களும் என் பேக்களும் என் போடிங் காட் பதிவில் விழுந்தது.
” பிடிபட்ட அவரது பேக்களும் துபாயில் இருந்து என் பெயரில் உள்ள போர்டிங் பாஸில் போடப்பட்டது. அவை என் பொருட்களாகத்தான் வந்தது. அதனால்தான் அவர்கள் என்னைப் பிடித்தார்கள்.”
“நான் பொறுப்பேற்க வேண்டும். ஆனால் பொருட்கள் என்னுடையது அல்ல. ஜனாதிபதி செயலாளரை அழைத்து நான் கூறினேன். பிரதமரிடமும் கூறினேன். இரண்டு பேரும் பார்க்கலாம் என்றனர். ஆனால் அவர்கள் எனக்கு உதவவில்லை.”
“நான் அரசாங்கத்தில் உறுப்பினராக இருந்ததால் எனது வீடுகள் எரிக்கப்பட்டன. எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டோம். இது போன்ற நேரத்தில் அரசு எனக்கு உதவவில்லை. அதனால்தான் நான் அரசுக்கு எதிராக இன்று வாக்களித்தேன்.