அரசு அமைப்புகள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் – பிரதமர் மோடி
அசாமில் மாநில அரசு சார்பில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்த வேலைவாய்ப்பு முகாமில் 45 ஆயிரம் பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து பணி ஆணைகளைப் பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பேசிய பிரதமர், அசாம் இளைஞர்களின் எதிர்காலம் மீது தீவிர கவனம் செலுத்திவருவதை பிரதிபலிக்கும் வகையிலேயே இந்த வேலைவாய்ப்பு முகாம் அமைந்துள்ளதாக தெரிவித்தார்.
இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர், ஒவ்வொரு புதிய கட்டமைப்புத் திட்டங்களின் மூலமும் வேலைவாய்ப்பு மற்றும் சுய வேலைவாய்ப்பு ஊக்கம் பெற்று வருவதாகக் கூறினார்.
புதிய இந்தியாவை கட்டமைக்கும் பணியில் அதிவேகமாக முன்னேறி வருவதாகவும் நரேந்திர மோடி குறிப்பிட்டார். தற்போது 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் அளவுக்கு காலம் மாறிவிட்டதாகவும், விரைவான பலன்களை மக்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
இதற்கு ஏற்ப அரசு அமைப்புகளும் தங்களைத் தாங்களே மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.