பார்கிங் பகுதியில் தூங்கிய குழந்தை…ஓட்டுநரின் அலட்சியம் காரணமாக கார் மோதி பலி!
ஓட்டுநரின் அலட்சியம் காரணமாக பார்க்கிங் பகுதியில் தரையில் படுத்து உறங்கிய 2 வயது குழந்தையின் மீது கார் ஏறியதில் அக்குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
கர்நாடகா மாநிலம் கல்புர்கி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ராஜூ, கவிதா தம்பதி. கூலித் தொழிலாளர்களான இவர்கள் வேலை நிமித்தமாக தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திற்கு குழந்தைகளுடன் இடம்பெயர்ந்துள்ளனர். அங்குள்ள ஹயாத் நகர் பகுதியில் கட்டட வேலையில் இவர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த தம்பதிக்கு 6 வயதில் மகனும் 2 வயதில் மகளும் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கம் போல கவிதா வேலைக்கு சென்றுள்ளார். அப்போது தனது 2 வயது மகள் லட்சுமியையும் உடன் கொண்டு சென்றுள்ளார். தனது குழந்தையுடன் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு, அதை சிறிது நேரம் தூங்க வைக்கலாம் என முடிவெடுத்தார்.
வெயில் அதிகமாக இருந்ததால், அருகே உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்தளத்தில் உள்ள பார்க்கிங் பகுதியில் ஓரமாக துணி ஒன்றை விரித்து போட்டு குழந்தையை தூங்க வைத்துள்ளார். மதியம் 2.30 மணிக்கு குழந்தையை தூங்க வைத்துவிட்டு அவர் அருகே நடைபெறும் கட்டட பணிக்கு சென்றுள்ளார்.
சுமார் 3 மணி அளவில் அந்த அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த ஹரிராமகிருஷ்ணா என்ற நபர் வெளியே சென்றுவிட்டு காரில் வீடு திரும்பியுள்ளார். தனது பார்க்கிங் பகுதியில் காரை நிறுத்த வந்த அவர், தரையின் ஓரத்தில் குழந்தை தூங்கிக்கொண்டிருந்ததை கவனிக்காமல் காரை பார்க் செய்தார். அப்போது தூங்கிக் கொண்டிருந்த குழந்தையின் மீது கார் ஏறியது.
இந்த கோர சம்பவத்தில் குழந்தை சம்பவ இடத்திலேயே பலியானது. இந்த பதைபதைக்கும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவியில் தெளிவாக பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.