பாராளுமன்றத்தின் முன்னாள் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவின் சேவை பாராளுமன்றத்தில் பாராட்டப்பட்டது.
ஏழு சபாநாயகர்களின் கீழும், பல்வேறு அரசாங்கங்களின் கீழும் பாராளுமன்றத்தின் சுயாதீனத்தையும் கௌரவத்தையும் பாதுகாக்க முன்னாள் செயலாளரினால் முடிந்தது – பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தன
பாராளுமன்றத்தினால் ஜனாதிபதியைத் தெரிவுசெய்யும் வாக்கெடுப்பு உட்பட தனது சேவைக்காலத்தில் முகங்கொடுத்த சவாலான சூழ்நிலைகளை அவர் சரியாக நிர்வகித்தார் – பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ
29 வருடங்களாக அவர் ஆற்றிய பெறுமதிமிக்க சேவை, பாராளுமன்றத்தின் நடைமுறைகள் மற்றும் சம்பிரதாயங்கள் பற்றிய பரந்த அறிவு மிகவும் பாராட்டத்தக்கது – சேவைநலன் பாராட்டுதல் தீர்மானத்தை முன்வைத்து சபைத் முதல்வர் தெரிவிப்பு
கடந்த 23ஆம் திகதி சேவையில் இருந்து ஓய்வுபெற்ற பாராளுமன்றத்தின் முன்னாள் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவின் சேவையைப் பாராட்டி ஆளும் கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் நேற்று (25) பாராளுமன்றத்தில் கருத்துக்களை முன்வைத்தனர்.
பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் ஒருவர் அப்பதவியிலிருந்து ஓய்வுபெறும்போது சேவைநலனைப் பாராட்டுதல் தீர்மானத்தை முன்வைப்பதற்கு நேரம் ஒதுக்கப்படுவது சம்பிரதாயமாகும். இதற்கமைய, முன்னாள் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவின் சேவைநலன் பாராட்டுக்காக காலை 9.30 முதல் 12.30 வரையான நேரம் ஒதுக்கப்பட்டது. சபையின் அனுமதியுடன் சபாநாயகர் முன்னாள் செயலாளர் நாயகத்தை சபாநாயகர் இருக்கைக்கு கீழே உள்ள செயலாளர் குழுவில் அமர வைத்தார்.
அதன் பின்னர் முன்னாள் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவின் சேவைநலன் பாராட்டுதல் தீர்மானத்தை சபைமுதர்வர் அமைச்சர் கௌரவ சுசில் பிரேமஜயந்த முன்வைத்தார்.
29 வருடங்களாக தம்மிக்க தசநாயக்கவின் பெறுமதியான சேவையையும், பாராளுமன்றத்தின் நடைமுறைகள் மற்றும் சம்பிரதாயங்கள் பற்றிய விரிவான அறிவையும் பாராளுமன்றம் மிகவும் பாராட்டுவதாக தீர்மானத்தை முன்வைத்து உரையாற்றிய சபைமுதல்வர் சுட்டிக்காட்டினார். மேலும், அவர் தனது கடமைகளை நிறைவேற்றுவதில் அவரது வலுவான அர்ப்பணிப்பு மற்றும் பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் ஆசிய பிராந்திய செயலாளராக பொதுநலவாய நாடுகள் மற்றும் வெளியிலும் மற்றும் பல்வேறு பாராளுமன்ற சங்கங்களில் அவரிடமிருந்து பெற்ற சிறந்த பங்களிப்பையும் நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.
இங்கு உரையாற்றிய பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்கள், பாராளுமன்றத்தில் சுதந்திரமாகவும் பலமான முறையிலும் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் திறன் முன்னாள் செயலாளர் நாயகத்திற்கு இருந்ததாக தெரிவித்தார். ஏழு சபாநாயகர்களின் கீழ் மற்றும் பல அரசாங்கங்களின் கீழ் பாராளுமன்றத்தின் சுதந்திரத்தையும் கண்ணியத்தையும் பாதுகாக்க முடிந்ததாகப் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், பாராளுமன்றத்தினால் ஜனாதிபதியை தெரிவு செய்தல் உட்பட தனது சேவையின் போது எதிர்கொள்ள வேண்டிய சவாலான சூழ்நிலைகளை சரியாக கையாளும் திறன் முன்னாள் செயலாளர் நாயகத்திற்கு இருந்ததாக பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ தனது உரையின்போது தெரிவித்தார்.
மேலும் ஜனநாயக ரீதியாக சாதகமான நடவடிக்கைகளுக்காக பாராளுமன்றத்தின் துறைசார் மேற்பார்வை குழுக்களை ஸ்தாபிப்பதில் முன்னாள் செயலாளர் நாயகம் சிறந்த பங்களிப்பை ஆற்றியதாக எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார். இங்கு கிடைத்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு எதிர்கால சந்ததியினருக்குப் பயன்படக்கூடிய புத்தகமொன்றை வெளியிடுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் முன்னாள் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்தார். மற்றும் அரசியலமைப்புப் பேரவையின் செயலாளராக எதிர்காலத்தில் பணியாற்றுவதற்கு வாழ்த்துத் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தின் முன்னாள் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவுக்கு எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் லக்ஷ்மன் கிரியல்ல வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், அவருடைய சேவையைப் பெரிதும் பாராட்டியிருந்தார்.
முன்னாள் சபாநாயகரும், பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ சமல் ராஜபக்ஷ பேசுகையில், பொதுநலவாய பாராளுமன்ற உறுப்பினர்கள் மாநாடு உள்ளிட்ட சர்வதேச மாநாடுகள் மற்றும் நிகழ்வுகளில் முன்னாள் செயலாளர் நாயகம் மிகவும் மதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டவர். மேலும், பாராளுமன்றத்தில் வெள்ளம் ஏற்பட்ட போது மெழுகுவர்த்தி ஏற்றி பாராளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்ததாகவும், சவால்கள் நிறைந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தமக்குப் பெரும் பலமாக இருந்ததாகவும் முன்னாள் சபாநாயகர் நினைவு கூர்ந்தார்.
முன்னாள் செயலாளர் நாயகத்தின் சேவையைப் பாராட்டி ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். பாராளுமன்றத்தில் கட்சி மற்றும் எதிர்கட்சிகளின் அனைத்து தரப்பிலிருந்தும் வந்த அழுத்தங்களை சமாளித்து பக்கச்சார்பற்றதாகவும் நேரடியாகவும் அவர் செயற்பட்டதாகவும் இதனால் அவரது சிறந்த சேவை பாராட்டுக்குரியது எனவும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
முன்னாள் செயலாளர் நாயகத்தின் மனைவி திருமதி சலினி நில்மல்கொட, பிள்ளைகள் உட்பட உறவினர்கள் குழுவினரும் விசேட விருந்தினர்களுக்கான கலரியிலிருந்து சபை அமர்வுகளைப் பார்வையிட்டனர்.
• பாராளுமன்றத்தின் முன்னாள் செயலாளர் நாயகம் குறித்த குறிப்பு
டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி மற்றும் கொழும்பு றோயல் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்ற தம்மிக்க தசநாயக்க அவர்கள் தனது சட்டமானிப் பட்டம் மற்றும் சட்டமுதுமானி பட்டம் ஆகியவற்றை கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பெற்றுக் கொண்டார். இலங்கை உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாகப் பதவிச்சத்தியம் செய்துகொண்டதன் பின்னர் 1988ஆம் ஆண்டு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் சட்ட ஆலோசகராக (ஆய்வு) நியமனம் பெற்றார்.
தம்மிக தசநாயக்க அவர்கள் அரச சட்டத்தரணியாக 1989ஆம் ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்தில் இணைந்துகொண்டு, காலி, கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, சிலாபம், பாணந்துரை, நீர்கொழும்பு மற்றும் அவிசாவளை உள்ளிட்ட மேல் நீதிமன்றங்கள் பலவற்றில் வழக்குகளுக்காக ஆஜராகியுள்ளார். உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனித உரிமை மீறல் தொடர்பான வழக்குகள் மாத்திரமன்றி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு வழக்குகளிலும் அவர் அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.
1994ஆம் ஆண்டு பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகமாகப் பாராளுமன்ற வாழ்க்கையைத் தொடங்கிய தம்மிக தசநாயக்க அவர்கள், 2003ஆம் ஆண்டு பாராளுமன்றத்தின் பிரதிச் செயலாளர் நாயகமாகவும், 2012ஆம் ஆண்டு பாராளுமன்ற செயலாளர் நாயகமாகவும் பதவி உயர்வு பெற்றார்.
தம்மிக தசநாயக்க அவர்களின் நீண்டகால பாராளுமன்ற பணி வாழ்க்கையில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் மதிப்பைப் பெற்ற இராஜதந்திர நடவடிக்கைகள் பலவற்றில் ஒத்துழைப்பை வழங்கியுள்ளதுடன், இவர் பாராளுமன்றங்களுக்கிடையிலான சங்கம் (IPU), பொதுநலவாய பாராளுமன்றங்களின் ஒன்றியம் (CPA) மற்றும் சார்க் பாராளுமன்ற சம்மேளனம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்களுக்காக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.
பொதுநலவாய பாராளுமன்றங்களின் ஒன்றியத்தின் பாராளுமன்ற செயலாளர் நாயகங்கள் சங்கத்தின் தெற்காசியவைப் பிரதிநிதித்துவப்படுத்தி செயற்குழுவின் உறுப்பினராகவும், 2010-2012 காலப் பகுதியில் தெற்காசிய பிராந்தியத்தின் பாராளுமன்ற செயலாளர்கள் சங்கத்தின் செயலாளராகவும், சார்க் சபாநாயகர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சங்கத்தின் செயலாளராகவும் இவர் பணியாற்றியுள்ளார். அத்துடன், பொதுநலவாய சங்க மன்றத்தினால் 2000ஆம் ஆண்டு பாராளுமன்ற நிர்வாகத்துக்கான அதியுயர் விருதும் தசநாயக்க அவர்களுக்கு வழங்கப்பட்டது.
தம்மிக தசநாயக்க அவர்கள் இலங்கை சனநாயகச் சோசலிசக் குடியரசின் 6வது செயலாளர் நாயகமாகத் தனது 29 வருட பாராளுமன்ற சேவைக்காலத்தைப் பூர்த்தி செய்து 2023..05.22ஆம் திகதி ஓய்வுபெற்றார்.