நாடு முன்னேற தீர்வே ஒரே வழி சஜித்திடம் சம்பந்தன் நேரில் எடுத்துரைப்பு.
“நாடு முன்னேற வேண்டுமெனில் நிலையான – நிரந்தர அரசியல் தீர்வு விரைந்து காணப்பட வேண்டும்.”
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் நேரில் எடுத்துரைத்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.
எதிர்க்கட்சித் தலைவருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கும் இடையிலான விசேட சந்திப்பு நேற்று (25) மாலை நடைபெற்றது. சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
மேற்படி சந்திப்பு தொடர்பில் சம்பந்தன் எம்.பியிடம் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நாம் இருவரும் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் பேசினோம். எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் பேசினோம். பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி தொடர்பிலும் பேசினோம். அரசியல் தீர்வு குறித்தும் முக்கிய கவனம் செலுத்திப் பேசினோம்.
நாட்டில் சமாதானம், சமத்துவம் நிலவ வேண்டுமெனில் – பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தியில் முன்னேற்றம் ஏற்பட வேண்டுமெனில் நிலையான – நிரந்தர அரசியல் தீர்வு விரைந்து காணப்பட வேண்டும் என்று சஜித் பிரேமதாஸவிடம் எடுத்துரைத்தேன். அதை அவர் ஏற்றுக்கொண்டார். மிகவும் முக்கியமான சந்திப்பு இது.” – என்றார்.
இந்தச் சந்திப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவிக்கையில்,
“நாட்டில் நிலவும் அரசியல் நிலைமைகள் தொடர்பில் இங்கு விரிவாக ஆராயப்பட்டது. நாட்டின் ஜனநாயகத்துக்கு ஏற்பட்டுள்ள மரண அடி மற்றும் பொருளாதார ரீதியாக ஏற்பட்டுள்ள வீழ்ச்சி குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.” – என்றார்.