கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகளை தடுத்தவர்கள் மீது வழக்கு பதிவு.
தமிழகம் முழுக்க 40-க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள அரசு ஒப்பந்ததாரர்கள் வீடு, அலுவலங்களில் இந்த சோதனை நடைபெற்றது.
அந்த வகையில், கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் நேற்று சோதனை நடத்த வந்த வருமான வரித்துறை அதிகாரிகளை திமுக-வினர் முற்றுகையிட்டனர். மேலும் அதிகாரிகளின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான தாக்குதலில் காயமுற்ற நான்கு வருமான வரித்துறை அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், அதிகாரிகளை தடுத்த மர்ம நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக கரூர் மாவட்ட காவல் துறை தெரிவித்து இருக்கிறது.
வருமான வரித்துறை அதிகாரிகளை தடுத்தவர்கள் மீது, அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், அனுமதி இன்றி 5-க்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்று கூடுதல், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.