பாதி வழியில் இறக்கி விட்ட அம்புலன்ஸ்: குழந்தையின் சடலத்தை 10 கி.மீ. கண்ணீரோடு சுமந்தே சென்ற பெற்றோர்..!

தமிழகத்தில் இறந்த குழந்தையின் சடலத்தை 10 கி. மீ, பெற்றோர் கண்ணீரோடு தூக்கி சென்ற சம்பவம், அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழகத்தின் வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவிற்கு உட்பட்ட, அத்திமரத்து கொல்லை கிராமத்தில், விஜி- பிரியா தம்பதியினர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இவர்களது ஒன்றரை வயது குழந்தையான தனுஷ்காவை, உறங்கி கொண்டிருந்த போது பாம்பு கடித்துள்ளது. இதனை அறிந்த பெற்றோர் உடனே அருகிலிருக்கும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, ஆம்புலன்ஸில் சென்றுள்ளனர்.
அவர்கள் ஊரிலிருந்து மருத்துவமனைக்கு செல்லும் பாதை மோசமாக இருந்ததால், ஆம்புலன்ஸ் மெதுவாக செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் பாதி வழியிலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது, பின்னர் தகவலறிந்த பொலிஸார் குழந்தையின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பிரேத பரிசோதனை முடிந்து ஆம்புலன்ஸில் குழந்தையின் சடலத்தை வீட்டிற்கு எடுத்து செல்லும் போது, பாதை மோசமாக இருந்ததால், ஆம்புலன்ஸ் ஊழியர் அவர்களை பாதி வழியிலேயே ஆம்புலன்ஸிலிருந்து இறங்கி விட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து பெற்றோர் என்ன செய்வதென தெரியாமல் கண்ணீரோடு, குழந்தையின் சடலத்தை கால் நடையாக 10 கி.மீ தூக்கி சென்றுள்ளார்.
இந்நிலையில் சாலை வசதி இருந்திருந்தால் எங்களது குழந்தையை காப்பாற்றியிருக்க முடியும், என உறவினர்கள் கண்ணீர் மல்க பத்திரிக்கையாளர்களிடம் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களை சோகத்தை ஆழ்த்தியுள்ளது. மேலும் அரசு கூடிய விரைவில் சாலை வசதிகளை அமைத்து தர வேண்டுமென, கோரிக்கை விடுத்துள்ளனர்.