விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி-எஃப்-12 ராக்கெட்!
வழிகாட்டி சேவைக்காக, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அணு கடிகாரம் கொண்ட NVS-01 செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி-எஃப்-12 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.
ஜிஎஸ்எல்வி எஃப்-12 ராக்கெட்டின் கவுன்ட்-டவுன் நேற்று காலை 7. 12 மணிக்கு தொடங்கியது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவு தளத்தின் இரண்டாவது தளத்தில் இருந்து இன்று காலை 10.42 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி-எஃப்-12 ராக்கெட் மூலம் NVS-01 செயற்கைக்கோள் ஏவப்பட்டது.
வழிகாட்டி சேவைக்காக இரண்டாவது கட்டமாக 5 செயற்கைக்கோள்கள் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதலாவதான NVS-01 செயற்கைக்கோள், 2,232 கிலோ எடை கொண்டதாகும். இதன்மூலம், நிலம் மற்றும் கடற்பரப்பில் பயணிக்கும்போது இடத்தையும், தொலைவையும் மிக துல்லியமாக கணிக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி முடிக்கப்பட்டால், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து வழிகாட்டி அமைப்பைக் கொண்ட நாடாக இந்தியா இருக்கும்.
இன்றைய பயணம் ஜி.எஸ்.எல்.வி வகை ராக்கெட்டின் 15ஆவது விண்வெளி பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.