வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள், பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதற்கான புதிய வழிமுறை இதோ!

வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டிற்காக ஜூன் 1ஆம் திகதி முதல் இணையவழியில் கடவுச்சீட்டை புதுப்பித்துக் கொள்ள முடியும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் தங்கள் நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களுக்கு செல்லாமல், ஆன்லைன் மூலம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் சர்வதேச உறவுகளுக்கான துறைசார் கண்காணிப்பு குழு கூட்டத்தில் தெரிவித்தனர்.
இதேவேளை, மின் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்தும் செயற்பாடுகளை துரிதப்படுத்துமாறு குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதுடன், இணையத்தள விசா விண்ணப்ப நடைமுறையின் குறைபாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தனித்தனியாக கலந்துரையாடப்பட்டுள்ளன.
வெளிநாட்டவர்கள் விசாக்களை இலகுவாகப் பெறுவதற்குத் தேவையான பொறிமுறையை விரைவாகத் தயாரித்து நடைமுறைப்படுத்துமாறும் , இலங்கையின் சர்வதேச விமான நிலையங்களில் உள்ளுர் மற்றும் வெளிநாட்டினருக்கான வசதிகளை மேலும் மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.