மட்டன் குழம்புக்காக சிறை காவலர்களை தாக்கிய கைதி!
மட்டன் குழம்புக்காக கைதி ஒருவர் சிறை காவலர்களை தாக்கிய பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கேரளா தலைநகர் திருவனந்தபுரம் அருகே உள்ள பூஜாபுரா மத்திய சிறையில் கடந்த 27ஆம் தேதி இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு வயநாட்டைச் சேர்ந்த முகமது பைஜாஸ் என்ற 42 வயது நபர் குற்றச் செயலில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த சிறையில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கைதிகளுக்கு மதிய உணவுடன் மட்டன் குழம்பு வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று சிறை அதிகாரிகள் மதிய உணவு வழங்கினர். அப்போது உணவை பெற்றுக்கொண்ட பைஜாஸ், தனக்கு மட்டன் குறைவாக உள்ளது கூடுதலாக வேண்டும் எனக் கேட்டுள்ளார்.
அதற்கு அதிகாரிகளோ வழக்கமான அளவு தான் தர முடியும் கூடுதலாக தர முடியாது என்றுள்ளனர். ஆனால், அவர்கள் பேச்சை கேட்காமல் பைஜாஸ் தகராறு செய்யவே, சிறை அதிகாரிகள் அங்கு விரைந்துள்ளனர். அப்போது பைஜாஸ் திடீரென தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த தாக்குதலில் சிறையின் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட மூன்று மூத்த அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.
உடனடியாக அங்கிருந்த ஜெயிலர்கள் பைஜாசை பிடித்து சிறப்பு வார்டில் அடைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிறை அதிகாரிகள் புகார் அளித்த நிலையில், பைஜாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.