புதிய கல்விக் கொள்கை… துணைவேந்தர்களை ஆலோசனைக்கு அழைத்த ஆளுநர்

புதிய கல்விக் கொள்கை குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என். ரவி, வரும் 5ஆம் தேதி ஆலோசனை நடத்துகிறார்.
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் 19 மாநில பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பல்கலைக்கழகங்களின் வேந்தராக தமிழ்நாட்டின் ஆளுநர் திகழ்கிறார். கடந்த ஆண்டு நீலகிரியில் உள்ள ஆளுநர் மாளிகையில் துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்திய ஆளுநர் ஆர்.என். ரவி, புதிய கல்விக் கொள்கையை பல்கலைக்கழகங்களில் அமல்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து வரும் ஜூன் 5ஆம் தேதி மீண்டும் பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார். புதிய கல்விக் கொள்கை தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க, ஆளுநர் அலுவலகத்தில் இருந்து துணைவேந்தர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஆளுநர் தரப்பிலிருந்து பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவுகள் அல்லது தகவல்கள் வருகின்ற போது மாநில அரசை துணைவேந்தர்கள் கலந்து ஆலோசிக்க வேண்டும் என துணைவேந்தர்களுக்கு உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
எனவே ஆளுநர் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து உயர் கல்வித்துறையின் அனுமதியைப் பெற துணைவேந்தர்கள் முடிவு செய்துள்ளனர்.