ஸ்ரீ மாரியம்மன் கோயில் முன்னாள் தலைமை அர்ச்சகருக்கு ஆறு ஆண்டு சிறை.
சிங்கப்பூர் சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் தலைமை அர்ச்சகராகப் பணியாற்றியபோது கந்தசாமி சேனாபதி கோயில் நகைகளைச் சட்டவிரோதமாக அடமானம் வைத்தமையால் 6 ஆண்டுகள் சிறை வழங்கப்பட்டுள்ளது.
நம்பிக்கையின் அடிப்படையில் கிட்டத்தட்ட 1 மில்லியன் டொலர் மதிப்புள்ள கோயில் நகைகள் சேனாபதியின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டிருந்தன. ஆனால் அவர் அந்த நகைகளை பலமுறை அடமானம் வைத்து கிட்டத்தட்ட 2.3 மில்லியன் டொலரை கையகப்படுத்தியுள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த 39 வயது சேனாபதிக்கு செவ்வாய்க்கிழமை சிங்கப்பூர் நீதிமன்றத்தால் (மே 30) ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்து அறக்கட்டளை வாரியத்திற்கு கீழ் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் சேனாபதி 2013ஆம் ஆண்டு வேலைக்குச் சேர்ந்தார். 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் அவருக்கு தலைமை அர்ச்சகராகப் பதவி உயர்வு கிடைத்தது.
2014ஆம் ஆண்டு முதல் கோயில் நிர்வாகம் 1.1 மில்லியன் டொலர் மதிப்புள்ள 255 தங்க நகைகளை அவரது பொறுப்பில் ஒப்படைத்தது.
முக்கியமான நாள்களில் கோயிலில் பூசைகள் நடக்கும்போது அந்த நகைகள் ஆலயத்தில் உள்ள தெய்வங்களுக்கு அணிவிக்கப்படும்.
சேனாபதி 2016ஆம் ஆண்டுக்கும் 2020ஆம் ஆண்டுக்கும் இடையில் 66 தங்க நகைகளை 172க்கும் மேற்பட்ட முறை அடமானம் வைத்துள்ளார். அக்காலகட்டத்தில் மட்டும் அவர் 2,328,760 டொலரை அடமானத் தொகையாகப் பெற்றுள்ளார்.
நகைகள் தொடர்பில் ஆலய நிர்வாகம் கணக்கு பார்க்கும்போதெல்லாம் அடமானம் வைத்த நகைகளை சேனாபதி மீட்பார்.
2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆலய நிர்வாகம் நகைகளை கணக்கு பார்க்க திட்டமிட்டது. அப்போது அவர் நகைகளை அடமானம் வைத்ததை ஒப்புக்கொண்டார்.
அதன் பின்னர் ஜூலை 29ஆம் தேதியன்று சேனாபதி மீது காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டது.
அர்ச்சகர் தான் அடமானம் வைத்த 66 நகைகளையும் ஒப்படைத்துவிட்டார், அதில் கோயில் நிர்வாகத்திற்கு எந்த நட்டமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.