மகாவலி ‘ஜே’ வலயத்துக்குத் தகவல்களை வழங்க வேண்டாம்! – முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் தீர்மானம்.
மகாவலி அபிவிருத்தி அதிகார சபையால் ‘ஜே’ வலயத்துக்குக் கோரப்பட்டுள்ள தகவல்களை பிரதேச செயலர்கள், மாவட்ட செயலர்கள் வழங்கக் கூடாது என்று முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மகாவலி அபிவிருத்தி அதிகார சபையால் வடக்கில் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களின் ஊடாக ‘ஜே’ வலயத்தை முன்னெடுப்பதற்குரிய தரவுகள் அதன் கீழ் உள்ளடங்கும் பிரதேச செயலர்களிடம் கோரப்பட்டிருந்தன. 37 கிராம அலுவலர் பிரிவுகள் இதன் கீழ் உள்ளடங்குகின்றன. இந்த விடயம் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டது.
மகாவலி ‘எல்’ வலயத்துக்கு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து ஒருங்கிணைப்புக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை சுட்டிக்காட்டப்பட்டது. இந்த வலயத்துக்கு முல்லைத்தீவின் 34 கிராம அலுவலர் பிரிவுகள் உள்ளடங்கியிருந்தன. இந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அதன் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே மகாவலி ‘ஜே’ வலயத்துக்கும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதியுடன் நேரடியாகக் கலந்துரையாடுவதாகவும் நேற்றைய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன், எஸ்.வினோநோதராதலிங்கம், கு.திலீபன், ரிஷாத் பதியுதீன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.