மேகதாது அணை திட்டத்தை தடுத்து நிறுத்துவோம்… முதல்வர் மு.க.ஸ்டாலின்

கர்நாடக துணை முதலமைச்சரும், நீர்ப்பாசனத் துறை அமைச்சருமான டி.கே. சிவக்குமார், நீர்ப்பாசனத் துறை உயர் அதிகாரிகளுடன் நேற்று முன் தினம் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, மேகதாது அணை திட்டத்தை முன்னுரிமை அடிப்படையில் அமல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேகதாது அணை திட்டத்திற்காக அரசு ஒதுக்கிய ஆயிரம் கோடி ரூபாய் நிதியை பயன்படுத்தாதது ஏன் என்று கேள்வியெழுப்பினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.சிவக்குமார்,

மேகதாதுவில் அணை கட்டப்படும் என்றும் வேறு மாநிலங்களுக்கு துரோகம் செய்யும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்றார்.

சிவக்குமாருக்கு பதில் அளித்துள்ள தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிடுவதை தமிழ்நாடு அரசு அனைத்து நிலைகளிலும் எதிர்க்கும் என தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பதவிப்பிரமாணம் செய்த சில நாட்களிலேயே டி.கே.சிவக்குமார், அண்டை மாநிலத்தை உரசிப் பார்க்கும் காரியத்தை செய்வது ஆச்சர்யமாக உள்ளதாக விமர்சித்துள்ளார். மேலும், மேகதாது தொடர்பாக விரைவில் டி.கே.சிவக்குமாரை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைக்கும் என்றும்,

அதுவரை அவர் அமைதி காப்பார் என்று நம்புவதாகவும் தனது அறிக்கையில் துரைமுருகன் குறிப்பிட்டுள்ளார்.

இச்சூழ்நிலையில், வெளிநாடு பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மேகதாது பிரச்னை குறித்து கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், நீர்வளத்துறை அமைச்சரின் நிலைப்பாட்டில், தானும் உறுதியாக உள்ளதாக தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.