படுக்கையில் சிறுநீர் கழிக்கும் 6 வயதுக் குழந்தை… தொடருமா, சரியாகுமா?
பிறந்த குழந்தைகள் எல்லோரும் குறிப்பிட்ட வயது வரை படுக்கையில் சிறுநீர் கழிப்பது இயல்பானது. குழந்தைக்கு இரண்டு வயதான பிறகு அந்தப் பழக்கம் தானாக நின்றுவிடும். படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கத்துக்கு மருத்துவ மொழியில் `நாக்டர்னல் அன்யூரெசிஸ்’ ( Nocturnal enuresis) என்று பெயர்.
வாரத்துக்கு இரண்டு, மூன்று முறைக்கு மேல் இப்படி படுக்கையில் சிறுநீர் கழித்தாலோ, மூன்று மாதங்களுக்கு மேல் இந்தப் பிரச்னை தொடர்ந்தாலோ, குழந்தைக்கு 7 வயதான பிறகும் இந்தப் பிரச்னை தொடர்ந்தாலோ மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளுக்கு இந்தப் பிரச்னை அதிகமிருக்கிறது. அதிகபட்சமாக 7 வயதுக்குள் இந்தப் பிரச்னை தானாகச் சரியாகிவிடும். சிறுநீர்ப்பை நிரம்பி, சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் வந்ததும் மூளைக்கு சிக்னல் அனுப்பப்படும். உடனே குழந்தைகள் சிறுநீர் கழித்துவிடுவார்கள். அரிதாக சில குழந்தைகள் தூக்கக் கலக்கத்தில் இதை உணராமல் படுக்கையிலேயே சிறுநீர் கழிப்பது உண்டு.
குழந்தையின் இந்தப் பிரச்னையைக் கிண்டல் செய்யத் தேவையில்லை. படுக்கையில் சிறுநீர் கழிப்பது குழந்தையின் தவறு அல்ல. சிறுநீர்ப்பை நிரம்பியதும் நரம்புகள் மூலம் மூளைக்கு தகவல் அனுப்பும் செயல் முதிர்ச்சியடையாமல் இருப்பதால்தான் இப்பிரச்னை வருகிறது.
குழந்தைகள், பெரியவர்கள் என எல்லோருக்கும் இந்தப் பிரச்னையில் இருந்து விடுபட சிகிச்சைகள் உள்ளன. இதை வெளியே சொல்லத் தயங்கிக்கொண்டு மறைக்கத் தேவையில்லை. குழந்தைகளுக்கு இந்தப் பழக்கம் இருந்தால், இரவில் குறிப்பிட்ட நேரத்தில் அலாரம் வைத்து அப்போது எழுப்பி சிறுநீர் கழிக்க வைக்கலாம். தூங்கச் செல்வதற்கு முன் சிறுநீர் கழிப்பதைப் பழக்க வேண்டும்.