அரசுப்பள்ளிகளில் நிரப்பப்படாமல் இருக்கும் 2,000 தலைமையாசிரியர் பணியிடங்கள்
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து, வரும் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில், தலைமை ஆசிரியர்கள் இன்றி 670 அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும், 435 அரசு உயர்நிலைப்பள்ளிகளிலும் வகுப்புகள் தொடங்க உள்ளன.
அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெற்று வரும் நிலையில், தலைமையாசிரியர் பணியிடத்திற்கான பதவி உயர்வு கலந்தாய்வு திட்டமிட்டபடி முறையாக நடைபெறவில்லை. இதன் காரணமாகவே, பெரும்பாலான பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாகவே உள்ளன.மேலும், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் என மூன்று பிரிவுகளிலும் 10,000-ற்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளன.
கடந்த காலங்களில் இதுபோல், தலைமை ஆசிரியர்கள் இன்றியும் போதிய ஆசிரியர்கள் இன்றியும் பள்ளிகள் திறக்கப்பட்டது இல்லை என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதே சமயம், பல்வேறு நீதிமன்ற வழக்குகள் காரணமாக தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வை நடத்த முடியவில்லை என்று கல்வித்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
இந்நிலையில், வழக்குகளுக்கு தீர்வு கண்டு தலைமையாசிரியர்களை நியமித்தால் மட்டுமே , வரும் கல்வி ஆண்டில் மாணவர்கள் படிப்பு பாதிக்காமல் இருக்கும் என்பது ஆசிரியர்களின் கருத்தாக உள்ளது.