மருதங்கேணியில் கஜேந்திரகுமார் எம்.பிக்கு இன்று நடந்தது என்ன?
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று பகல் மருதங்கேணியில் தாக்கப்பட்டார். அவரை அடித்தார் என்று கூறப்படும் அரச புலனாய்வாளர் தப்பிச் சென்று தலைமறைவாகினார் என்று தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான முரண்பாடுகளின்போது கஜேந்திரகுமாரைப் பொலிஸ் புலனாய்வாளர் என்று அடையாளப்படுத்திக் கொண்ட நபர் ஒருவர் பிஸ்டலைக் காட்டி மிரட்டினார் என்றும் குற்றஞ்சாட்டப்படுகின்றது.
இந்தச் சம்பவம் தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:-
மருதங்கேணியில் உள்ள விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்தவர்களைச் சந்திப்பதற்காக அங்கு சென்றிருந்தார் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார். அங்குள்ள மைதானத்தில் இளைஞர்களுடன் அவர் கலந்துரையாடிக் கொண்டிருந்ததை இருவர் தமது அலைபேசியில் காணொளியாகப் பதிவு செய்து கொண்டிருந்தனர்.
இதைக் கண்டதும் நாடாளுமன்ற உறுப்பினரின் ஆய்வு உதவியாளர் அந்த இருவரிடமும் சென்று, நீங்கள் யார், எதற்காகக் காணொளிப் பதிவுகளைச் செய்கிறீர்கள் என்று வினவியுள்ளார்.
தமது விவரங்களை வெளியிட மறுத்த அந்த இருவருக்கும் ஆய்வு உதவியாளருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் கவரப்பட்ட ஏனையவர்கள் அந்த இடத்தில் குழும இரு தரப்பினருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் அவர்கள் தங்களை அரச புலனாய்வாளர்கள் என்று கூறியுள்ளனர். அதனை நிரூபிப்பதற்கு வேண்டிய அடையாள அட்டையைக் காண்பிக்கும்படி நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் அவர்களிடம் வலியுறுத்தியுள்ளார். ஆனால், அவர்கள் அதைச் செய்யவில்லை.
இதையடுத்து வாய்த்தர்க்கங்கள் இரண்டு தரப்பினருக்கும் இடையில் முற்றிய நிலையில் தம்மைப் புலனாய்வாளர்கள் என்று அடையாளப்படுத்திய இருவரில் ஒருவர் திடீரென நாடாளுமன்ற உறுப்பினரைத் தலைக்கவசத்தால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இதனால் ஆத்திரமுற்ற மற்றையவர்கள் எஞ்சிய நபரைச் சுற்றிவளைத்துள்ளனர். தாக்கிவிட்டு ஓடிய நபர் அங்கு வரும் வரை அவரை விடுவிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளனர். அந்த நபர் உடனடியாகப் பொலிஸாருக்குத் தொலைபேசி அழைப்பெடுத்துப் பேசியுள்ளார்.
அந்தச் சந்தர்ப்பத்தில் அருகில் இருந்த பாடசாலையொன்றினுள் இருந்து பொலிஸ் சீருடையிலும் பொலிஸ் சிவிலுடையிலுமாக வந்த இருவர் என்ன, ஏது என்று விசாரித்துள்ளனர்.
முன்னணியினர் மடக்கி வைத்திருந்த நபர் அரச புலனாய்வாளர் என்று கூறி அவரை விடுவிக்குமாறு இரு பொலிஸாரும் தெரிவித்துள்ளனர்.
தப்பியோடியவர் வராமல் அவரை விடுவிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டதும் மோசமான வார்த்தைகளால் இரு பொலிஸாரும் திட்டியுள்ளனர்.
அப்போது ஒருவர் தன்னிடமிருந்த பிஸ்டலைத் தூக்கி நாடாளுமன்ற உறுப்பினரின் முகத்துக்கு நேரே நீட்டி மடக்கி வைத்திருக்கும் நபரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளார்.
இந்தச் சமயத்தில் பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் அங்கு வருகை தந்தார். ஏ.ஜயதிஸ்ஸ என்று அவர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். தானே அந்தப் பகுதிக்கான பொலிஸ் நிலையப் பதில் பொறுப்பதிகாரி என்றார்.
அவரும் முன்னணியினர் மடக்கி வைத்திருக்கும் நபர் அரச புலனாய்வாளர் என்றும், அவரை விடுவிக்கும்படியும் வலியுறுத்தினார்.
அந்த இருவரும் இப்படித் தவறாக நடந்துகொண்டதற்காகத் அவர்களுக்குத் தண்டனை இடமாற்றம் வழங்குவார் என்றும், இந்தப் பிரச்சினையை இணக்கப்பாட்டுடன் முடித்துக்கொள்ளலாம் என்றும் பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் தெரிவித்தார்.
ஆனால் முன்னணியினர் அதற்கு மறுப்புத் தெரிவித்துவிட்டனர். தாக்கிவிட்டுத் தப்பியோடிய நபரைக் கொண்டு வந்து அடையாளப்படுத்தும் வரைக்கும் மடக்கி வைத்திருந்த நபரை விடுவிக்க முடியாது என்று தெரிவித்தனர். இதனால் அங்கு மீண்டும் தர்க்கமான சூழல் எழுந்தது.
இதையடுத்து பொலிஸ் நிலையத்துக்கு வந்து இது தொடர்பில் முறைப்பாடு வழங்குமாறும் சப் இன்ஸ்பெக்டர் ஜயதிஸ்ஸ, நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தின் மூலம் தனது நாடாளுமன்றச் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது என்று தெரிவித்து, அதற்குரிய நடவடிக்கையை எடுப்பேன் என்று கூறிய பின்னர் தடுத்து வைத்திருந்த நபரை விடுவித்து அங்கிருந்து புறப்பாட்டார் கஜேந்திரகுமார்.” – என்றனர்.
சம்பவம் குறித்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி., தான் தாக்கப்பட்டது உண்மை என்று உறுதிப்படுத்தினார். அத்துடன் தன்னை நோக்கிப் பிஸ்டல் நீட்டப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
”அருகிலிருந்த பாடாசலையில் இருந்து வந்த இருவர் நாம் தடுத்து வைத்திருந்த நபரை விடுமாறு கோரி மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தினர். அதற்குள், ஒருவர் என்னைத் துப்பாக்கியால் இலக்குவைத்து தடுத்து வைக்கப்பட்டுள்ள நபரை விடுவிக்குமாறு கோரினார்” – என்று யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கஜேந்திரகுமார் எம்.பி. தெரிவித்தார்.