பயங்கர ரயில் விபத்தில் சிக்கி உயிர்பிழைத்த இளைஞர் பரபரப்பு பேட்டி
ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் கோர விபத்தில் சிக்கியது. நேற்று மாலை 7 மணி அளவில் இந்த விபத்து நிகழ்ந்த நிலையில், விபத்தில் இதுவரை 288 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 1000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த ரயிலில் பயணித்தவர்களில் பலர் புலம்பெயர் தொழிலாளர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக சென்னை மெட்ரோ பணிக்காக பலர் மேற்கு வங்கத்தில் இருந்து இந்த ரயில் மூலமாக சென்னைக்கு பயணம் மேற்கொண்டனர்.
வாழ்வாதாரம் தேடி சென்ற இவர்களுக்கு பேரதிர்ச்சி தரும் விதமாக கோர விபத்து ஏற்பட்ட நிலையில், உயிர் தப்பிய பயணி ஒருவர் விபத்து குறித்து பிரத்தியேக தகவல்களை கூறியுள்ளார். மேற்கு வங்கத்தின் சோனார்பூரில் வசிக்கும் சுகந்த் ஹல்டர், சென்னையில் மெட்ரோ திட்டத்தில் வேலை செய்வதற்காக ஷாலிமார் நிலையத்திலிருந்து கோரமண்டல் எக்ஸ்பிரஸின் S7 பெட்டியில் பயணித்துள்ளார்.
முப்பது வயதான இவர் விபத்து குறித்து கூறியதாவது, ரயில் ஷாலிமாரில் இருந்து புறப்பட்ட நிலையில் இயல்பான வேகத்தில் இயங்கியது. தொடர்ந்து காரக்பூரை கடந்த சிறிது நேரத்திலேயே, மாலை சுமார் 6:30 மணியளவில், திடீரென விபத்துக்குள்ளானது. எங்கள் பெட்டிக்குள் பெரும் அதிர்வு ஏற்பட்டு தலைகீழாக புரண்டது. முதலில் என்ன நடந்தது என்பதைப் புரிந்து கொள்ள சிறிது நேரம் ஆனது. பின்னர் தான் ரயில் ஒரு பெரிய விபத்தில் சிக்கியிருப்பதை உணர்ந்தேன்.
அதற்குள் பெட்டிக்குள் இருந்த பயணிகளின் அலறல் சத்தம் கேட்க தொடங்கியது. சுற்றிலும் ரத்தம் ஓடுகிறது. இருள் சூழ்ந்த பெட்டியில் எப்படி வெளிவருவது என்று சிறிது நேரம் புரியவில்லை சுமார் அரை மணி நேரம் கழித்து எப்படியோ அறையை விட்டு வெளியே வந்தேன் என்றார். சுகந்தரின் நெற்றி, கழுத்து மற்றும் கால்களில் காயம் ஏற்பட்ட நிலையில், வெளியே பார்த்த காட்சிகளை அவரால் ஒரு கணம் நம்ப முடியவில்லையாம்.
தன்னருகே இருந்தவர்களே தேடி பார்த்து காணவில்லை என்ற நிலையில், ரயில் பாதையில் இருந்து இறங்கி சிறிது தூரம் நடந்து சாலைக்கு வந்தார். அங்கிருந்து ஒரு சிறிய காரில் லிப்ட் கேட்டு பாலசோரை அடைந்தார். பாலசோருக்குச் சென்ற பின்னர் கொல்கத்தாவுக்குப் பேருந்து ஏறினார்.
கையில் காசு ஏதும் இல்லாத நிலையில், பஸ் டிரைவரிடம் முழு சம்பவத்தையும் விளக்கினார். அதை கேட்ட பஸ் டிரைவர் மற்றும் ஊழியர்கள் பணம் பெறாமல் ஊர் சென்று சேர்க்க சம்மதித்துள்ளனர். கடைசியாக சுகந்த் இன்று காலை பஸ்சில் பாபுகாட் வந்தடைந்தார். இவர் மட்டுமின்றி, விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸில் பயணித்த பலரும் இதே போலத்தான் இன்று அதிகாலை ஒடிசாவில் இருந்து கொல்கத்தாவுக்கு பஸ்சில் வந்தனர்.