கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கு தீர்ப்பு நாட்டுக்கே வழிகாட்டக்கூடியது
சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ் கடந்த 2015ஆம் ஆண்டு ஆணவ கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு, மதுரை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து 10 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் கோகுல்ராஜ் கடைசியாக உயிருடன் காணப்பட்ட திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் மற்றும் சடலமாக கண்டெடுக்கப்பட்ட ரயில் பாதை ஆகியவற்றையும் நேரில் ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில், வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பளித்த நீதிபதிகள், கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதே போன்று, சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை என குறிப்பிட்டனர்.
அதன்படி, யுவராஜ் உள்ளிட்ட 10 பேரின் மேல்முறையீட்டு மனுக்களையும் தள்ளுபடி செய்த நீதிபதிகள், ஆயுள் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டனர். இந்த வழக்கை ஆணவக் கொலை என்று கருதிய நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சாதி எனும் கொடூரத்தின் தாக்கத்தில் இருந்தனர் என்றும் தெரிவித்தனர்.
இதனிடையே, கோகுல்ராஜ் கொலை வழக்கில் இருந்து 5 பேர் விடுவிக்கப்பட்டதில் தலையிட விரும்பவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். ஐவர் விடுதலையை எதிர்த்து கோகுல்ராஜின் தாயார் சித்ரா தாக்கல் செய்த மனுவையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதையடுத்து கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கின் தீர்ப்பு நாட்டுக்கே வழிகாட்டக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு என அரசுத்தரப்பு வழக்கறிஞர் மோகன் தெரிவித்தார். தீர்ப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் மோகன், வழக்கில் சிசிடிவி காட்சிகள் முக்கிய சாட்சியாக விளங்கியதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ஆசிரியர் கார்த்திகைச்செல்வன் நடத்திய விவாத நிகழ்ச்சியில் கிடைத்த முக்கிய ஆதாரத்தை விளக்கினார். ஆணவக்கொலை தடுப்பு சட்டத்தை தமிழ்நாடு அரசு விரைவில் நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.