அயர்லாந்துக்கு எதிரான டெஸ்டில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி.

இங்கிலாந்து, அயர்லாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி லண்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய அயர்லாந்து முதல் இன்னிங்சில் 172 ரன்களுக்கு சுருண்டது. இங்கிலாந்து சார்பில் பிராட் 5 விக்கெட்டும், ஜேக் லீச் 3 விக்கெட்டும், மேத்யூ பாட்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது.

தொடக்கம் முதல் இங்கிலாந்து வீரர்கள் அடித்து ஆடினர். ஜேக் கிராவ்லி 56 ரன்னில் அவுட்டானார். பென் டக்கெட் சதமடித்து 24 பவுண்டரி 1 சிக்சருடன் 182 ரன்களை விளாசினார். ஒல்லி போப் இரட்டை சதமடித்து 22 பவுண்டரி 3 சிக்சருடன் 205 ரன்கள் குவித்தார். ஜோ ரூட் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 524 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து, 352 ரன்கள் பின்தங்கிய நிலையில், அயர்லாந்து அணி 2வது இன்னிங்சில் களமிறங்கியது. இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுக்கு 97 ரன்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. ஹாரி டெக்டர் அரை சதமடித்து 51 ரன்னில் அவுட்டானார். மார்க் அடைர் 88 ரன் எடுத்து வெளியேறினார். ஆண்டி மெக்பிரின் 86 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில், அயர்லாந்து 9 விக்கெட்டுக்கு 362 ரன்கள் எடுத்தது.

இங்கிலாந்து சார்பில் ஜோஷ் டாங் 5 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து 2வது இன்னிங்சில் 12 ரன் எடுத்து அபார வெற்றி பெற்று 1-0 என தொடரை கைப்பற்றியது. ஒல்லி போப் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

Leave A Reply

Your email address will not be published.