முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவளத்திணைக்களப் பிடியிலிருந்து 29 ஆயிரம் ஏக்கரை விடுவிக்க இணக்கம்!
முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்கள் தற்போது பயன்படுத்தும் 29 ஆயிரம் ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு வனவளத் திணைக்களம் இணங்கியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் காணிப் பிரச்சினைகள் தொடர்பான முக்கிய கலந்துரையாடல் முல்லைத்தீவு மாவட்ட பதில் செயலர் க.கனகேஸ்வரன் தலைமையில் கரைதுறைப்பற்று பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது, “கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், துணுக்காய், மாந்தை கிழக்கு, வெலிஓயா முதலிய மாவட்டத்தின் ஆறு பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பகுதிகளில் முன்னர் பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்த 29 ஆயிரம் ஏக்கர் காணிகள் விடுவித்தல் தொடர்பில் மீள் வர்த்தகமானி உருவாக்கத்துக்கான வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று முன்னர் மக்கள் பயன்பாட்டில் இருந்த 17 ஆயிரம் ஏக்கர் காணிகள் இன்றுவரை விடுவிக்கப்படாமல் பற்றைகளும் காடுகளுமாக இருக்கின்றன. இவற்றுக்கான தீர்வைப் பெற்றும் கொடுக்கும் நோக்கில் ஜனாதிபதியின் செயலர் தலைமையில் தேசிய குழு ஒன்று நியமிக்கப்பட்டு அதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும்”- என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், வனஉயிரிகள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள நந்திக்கடல், கொக்கிளாய், சுண்டிக்குளம், நாயாறு ஆகிய இடங்களிலும் மக்கள் பாவனைக்குக் காணிகளை விடுவிப்பது தொடர்பில் இணக்கம் காணப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் வன உயிரிகள் அமைச்சின் மேலதிக செயலர் திருமதி சமந்தி, வன உயிரிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் மஞ்சுள, வன வளத்திணைக்களத்தின் நாயகம், மேலதிக மாவட்ட செயலர் எஸ்.குணபாலன், மாவட்ட உதவி மாவட்ட செயலர், பிரதேச செயலர்கள், கமநல சேவை திணைக்களத்தின் உதவி ஆணையாளர், மாவட்ட வனவள திணைக்களத்தின் பணிப்பாளர், பிரதி நீர்ப்பாசன பொறியலாளர், காணிப் பகுதி உத்தியோகத்தர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.