ரத்த தானம் செய்த ஒடிசா மக்களுக்கு பிரதமர், முதல்வர் பாராட்டு

ஒடிசாவில் நடந்த கோர ரயில் விபத்தின் துயரத்திற்கும் மத்தியில் நெகிழ்ச்சியூட்டும் நிகழ்வாக, காயமடைந்தவர்களுக்கு ரத்ததானம் கொடுக்க சுற்றுவட்டார இளைஞர்கள் திரண்டனர். மதம், இனம், மொழி என அனைத்து பாகுபாடுகளையும் தகர்த்தெறிந்து மனிதம் மட்டுமே உயர்ந்தது என்பதை சென்னை பெருவெள்ளம் போன்ற பேரிடர் காலங்கள் மற்றும் கோர விபத்துக்களுக்கு மத்தியில் மக்கள் ஒவ்வொரு முறையும் நிரூபித்து வருகின்றனர்.
அந்த வகையில், ஏராளமானோர் உயிரை பறித்த ஒடிசா ரயில் விபத்தில், நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ள நிலையில் அவர்களுக்கு ரத்த தானம் வழங்க மருத்துவமனைகளில் சுற்றுவட்டார இளைஞர்கள் குவிந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர்கள், அருகில் உள்ள பாலாசோர், பத்ராக், கட்டாக் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து செய்தி அறிந்ததும் உள்ளூர் மக்கள் பலரும் மருத்துவமனைக்கு விரைந்து நீண்ட வரிசையில் நின்று ரத்த தானம் செய்தனர். இதனால், ஒரே நாள் இரவில் 500 யூனிட் ரத்த தானம் பெறப்பட்டுள்ளதாகவும் 3000த்துக்கும் அதிகமான யூனிட் ரத்தம் கையிருப்பு உள்ளதாகவும் ஒடிசா தலைமைச் செயலாளர் பிரதீப் ஜெனா தெரிவித்துள்ளார்.
குறிப்பாக இளைஞர்கள் பலர் விடிய விடிய நீண்ட வரிசையில் நின்று ரத்த தானம் செய்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில், உள்ளூர்வாசிகளின் மனித நேயத்தை பலரும் நெஞ்சுருக பாராட்டி வருகின்றனர். மீட்பு பணியிலும் அப்பகுதி மக்கள் பெருமளவில் உதவி உள்ளதாக கூறப்படும் நிலையில், அவர்கள் அனைவருக்கும் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் நன்றி தெரிவித்தார்.
அதேபோல, நேற்று விபத்து குறித்து ஆய்வு செய்த பிரதமர் நரேந்திர மோடி உள்ளூர்வாசிகளின் உதவிகளை பாராட்டியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் கூறியதாவது, “ஒடிசா அரசு, உள்ளூர் நிர்வாகம் மற்றும் உள்ளூர் மக்கள், குறிப்பாக இளைஞர்கள், இரவு முழுவதும் தொடர்ந்து மீட்பு பணிகளில் உதவுவதற்காக உழைத்தனர்.
மேலும், காயமடைந்தவர்களுக்கு உதவுவதற்காக ரத்ததானம் செய்ய ஏராளமான உள்ளூர் மக்கள் வரிசையில் நின்று உதவியது நெகிழ்ச்சி அளிக்கிறது. துயர சம்பவத்தின் போது நாட்டு மக்களின் தைரியம், கருணை ஊக்கமளிப்பவை என்று அவர் தெரிவித்தார்.