ஒடிசா ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 290ஆக உயர்வு

ஒடிசாவில் கோரமண்டல் விரைவு ரயில் உள்பட 3 ரயில்கள் ஒன்றோடொன்று மோதிய விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 290-ஆக அதிகரித்துள்ளது.
800க்கும் அதிகமானோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒடிசா மாநிலம் பாலாசோர் பகுதியில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஒடிசாவின் பாலசோா் மாவட்டம், பஹாநகா் பஜாா் ரயில் நிலையம் அருகே இரவு 6.50 மணியளவில் மூன்று ரயில்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது.
பஹாநகா் பஜாா் பகுதியில் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டிருந்த தண்டவாளத்தில் கோரமண்டல் ரயில் நுழைந்து, சரக்கு ரயிலின் மீது மோதிய்து. இதில் கோரமண்டல் ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டன. அவை, சரக்கு ரயில் மீதும், அருகில் இருந்த மற்றொரு தண்டவாளத்திலும் சிதறி விழுந்தன.
அப்போது, அந்த தண்டவாளத்தில் எதிா்த்திசையில் வந்த பெங்களூரு-ஹெளரா விரைவு ரயில், அந்தப் பெட்டிகள் மோதி தடம்புரண்டு கோர விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், விமானப் படையினரும் ஈடுபட்டிருந்தனர். இதுவரை 290 பேர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். 800-க்கும் அதிகமானோர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நூற்றூக்கும் அதிகமான மருத்துவர்கள், செவிலியர்கள் இரவு பகலாக மருத்துவ உதவி அளித்து வருகின்றனர். அவர்களுடன் தன்னார்வலர்களும் விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு உதவி வருகின்றனர்.
மேலும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு குடிநீர், உணவு போன்ற அடிப்படை வசதிகளை தன்னார்வ அமைப்புகள் வழங்கிவருகின்றன.