சீனாவில் திடீர் நிலச்சரிவு- 14 பேர் சடலமாக மீட்பு.

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் கடந்த சில தினங்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஜின்கோஹியில் உள்ள மலைப்பகுதியில் இன்று கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. அரசுக்கு சொந்தமான வனத்துறை அலுவலகம் உள்ள பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பலர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.
உடனடியாக மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் 14 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். 5 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியானது மாகாண தலைநகர் செங்டுவில் இருந்து 240 கிமீ தொலைவில் உள்ள மலைப்பிரதேசம் ஆகும். தொலைதூர மற்றும் அடர்ந்த காடுகள் நிறைந்த சிச்சுவானின் பெரும்பகுதி, நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடரால் பேரழிவுக்கு உள்ளாகிறது.