வாஷிங்டன் மீது பயங்கர சத்தம் எழுப்பி போர் விமானம் பறந்ததால் பரபரப்பு.
அமெரிக்காவின் முக்கிய நகரான வாஷிங்டன் மீது பறந்த விமானத்தில் இருந்து எந்த பதிலும் கிடைக்காத காரணத்தினால், போர் விமானம் அதை துரத்திச் சென்ற சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகருக்கு மேல் உள்ளூர் நேரப்படி நேற்று மதியம் ‘செஸ்னா 560 சிட்டாசன் வி’ என்ற விமானம் பறந்து கொண்டிருந்தது. இந்த விமானத்தின் மீது சந்தேகம் ஏற்பட்டதால் விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்து அதிகாரிகள் அந்த விமானத்தை தொடர்பு கொள்ள முயன்றனர். அந்த விமானத்தில் இருந்து பதில் கிடைக்கவில்லை.
தொடர்ந்து முயற்சித்தும் எந்த பயனும் இல்லை. இறுதியாக அந்த விமானத்தை நோக்கி போர் விமானம் சென்றது. போர் விமானம் அதிர்வலைகளுடன் பயங்கர சத்தத்துடன் பறந்து அதை விரட்டியடிக்க முயன்றது. இதனால் வீட்டில் இருப்பவர்கள் என்ன ஆனதோ? என பதறியப்படி வானத்தை பார்த்து அச்சம் அடைந்தனர்.
இறுதியில் வாஷிங்டன் வான் எல்லையில் இருந்து விலகி மலைப்பகுதியில் மோதி விபத்துள்ளானது. அந்த விமானத்தில் எத்தனை பேர் பயணம் செய்தனர் என்பது தெரியவில்லை. பயணம் செய்த யாரும் உயிர்ப்பிழைக்க வாய்ப்பில்லை எனவும் தெரிகிறது. ஒரு கட்டத்தில் போர் விமானம் மீது அந்த விமானம் மோதுவது போன்று வந்ததாகவும் கூறப்படுகிறது.