“புல்லட் ரயில் வேண்டாம்… பாதுகாப்பு தொழில்நுட்பம்தான் வேண்டும்…” – அன்புமணி ராமதாஸ்
இந்தியாவில் புல்லட் ரயில் கொண்டு வருவதை விட நிதி ஒதுக்கி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் தொழில்நுட்பத்தை கொண்டு வர வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தருமபுரியில் கடந்த 15 நாட்களாக கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்றது. பல அணிகள் கலந்து கொண்ட தொடரின் இறுதிப்போட்டியை அன்புமணி தொடங்கி வைத்து கிரிக்கெட் விளையாடினார்.
பின்னர் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கி பேசிய அன்புமணி, 10 மாதத்துக்கு முன்பு மின்கட்டணத்தை உயர்த்திய நிலையில் மீண்டும் உயர்த்தப் போவதாக கூறுவதை ஏற்க முடியாது என்றார்.
தாம்பரம் பகுதியில் சட்டவிரோதமாக 77 மது பார்கள் செயல்பட்டதாகவும், இது காவல் துறையினருக்கு தெரியாமல் நடந்திருக்காது எனவும் அன்புமணி கூறினார். மேலும், செந்தில் பாலாஜி போன்றவர்களால் திமுக ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுவதாகவும், மதுவிலக்கு துறைக்கு சமூக அக்கறையுள்ள ஒருவரை முதல்வர் நியமிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும் இந்தியாவில் புல்லட் ரயில் கொண்டு வருவதை விட நிதி ஒதுக்கி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் தொழில்நுட்பத்தை கொண்டு வர வேண்டும் எனவும் கூறியுள்ளார்.