வற்றாப்பளை சென்றுவிட்டு வீடு திரும்பிய அம்பன் இளைஞர் கோர விபத்தில் இறப்பு! – வரணியில் அதிகாலை துயரம்.

முல்லைத்தீவு, வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் பொங்கல் உற்சவத்துக்குச் சென்று விட்டு யாழ்., வடமராட்சி கிழக்கில் உள்ள தனது வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் விபத்துக்குள்ளாகி சாவடைந்துள்ளார்.
வடமராட்சி கிழக்கு, அம்பன் – குடத்தனையைச் சேர்ந்த நிரோஜன் என அழைக்கப்படும் குணசெல்வம் நிகர்ஷன் (வயது 31) எனும் இளைஞரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்தத் துயரச் சம்பவம் தென்மராட்சி, வரணிப் பகுதியில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இளைஞரின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காகப் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைக் கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.