மரண தண்டனைக் கைதி எம்.பியாகப் பதவியேற்றமை தொடர்பில் சந்திரிகா, மங்கள கூட்டாகக் கடும் ஆட்சேபம்

“குற்றவாளிகளும், கொலையாளிகளும் ஆட்சிப்பீடத்தில் இருக்கும்போது மரணதண்டனைக் கைதி ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்பதும் சகஜம்தான். இந்தக் கொலைகார ஆட்சிக்கு ஆணை வழங்கிய நாட்டு மக்கள் தலைகுனிந்து வெட்கப்பட வேண்டும்.”
– இவ்வாறு முன்னாள் ஜனாதியாதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் கூட்டாகத் தெரிவித்தனர்.
இம்முறை பொதுத்தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியிருந்த மரணதண்டனைக் கைதியான பிரேமலால் ஜயசேகர நேற்றுமுன்தினம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் எம்.பியாகச் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். இதன்போது பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கழுத்தில் கறுப்புப் பட்டிகளை அணிந்துகொண்டு அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசமைப்புக்கமைய மரணதண்டனைக் கைதியொருவர் எம்.பியாகப் பதவியேற்க முடியாது என்று அவர்கள் கோஷம் இட்டு சபையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர். இந்தநிலையிலேயே சந்திரிகாவும், மங்களவும் மேற்கண்டவாறு கூறினார்கள்.
அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:-
“ஆட்சியாளர்களும் நீதித்துறையும் நாட்டின் அரசமைப்புக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும். அரசமைப்புக்கமைய மரணதண்டனைக் கைதி ஒருவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவும் முடியாது; எம்.பியாகப் பதவியேற்கவும் முடியாது. ஆனால், இலங்கையில் தற்போதைய ஆட்சியில் எல்லாம் தலைகீழாக நடக்கின்றது. ஜனநாயகம் சாகடிக்கப்படுகின்றது. நீதித்துறையும் நாடாளுமன்றமும் ஆட்சியாளர்களின் காலடிகளுக்குச் செல்கின்றது.
கொலைக்குற்றத்துடன் தொடர்புபட்டமைக்காகவே பிரேமலால் ஜயசேகரவுக்கு நீதிமன்றம் மரணதண்டனை வழங்கியிருந்தது. மரணதண்டனைக் கைதியான அவர், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தற்போது எம்.பியாகப் பதவியேற்றுள்ளார். இது எந்தவகையில் நியாயமானது?
ஆனால், ஒரு விதத்தில் இந்த விடயம் இந்த ஆட்சியில் சகஜமாகத்தான் இருக்கின்றது. ஏனெனில் குற்றவாளிகளும், கொலையாளிகளும் ஆட்சிப்பீடத்தில் இருக்கும்போது மரணதண்டனைக் கைதி ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்பதும் சகஜம்தான். இந்தக் கொலைகார ஆட்சிக்கு ஆணை வழங்கிய நாட்டு மக்கள் தலைகுனிந்து வெட்கப்பட வேண்டும்.
ஆளுந்தரப்பில் பிரேமலால் ஜயசேகரவுக்கு மட்டும்தான் நீதிமன்றம் மரணதண்டனை வழங்கியுள்ளது. ஆனால், அந்தத் தரப்பிபிலுள்ள பல பேர் மரணதண்டனைக் கைதிகளாவர். அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படாத காரணத்தால் இன்று வெளியில் சுதந்திரமாக நடமாடுகின்றார்கள்.
நாட்டின் அதியுயர் சபையை இன்று நாடாளுமன்றம் என்று கூறுவதைவிட மரணதண்டனைக் கைதிகளின் சிறைக்கூடம் என்று கூறினாலும் தப்பில்லை” – என்றனர்.