உடல்களில் எந்த காயங்களோ, ரத்தக் கறையோ இல்லை… ரயில் விபத்தில் 40 பேர் பலியானது எப்படி?
ஒடிசா மாநிலம் பாலசோரில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட வரலாறு கானாத ரயில் விபத்தில் 275 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 1,100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவ சிகிச்சை பெற்றனர். இந்த கோர விபத்து நாட்டையே உலுக்கிய நிலையில் விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொள்ள மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
விபத்து நடந்த இடத்தில் மீட்பு, புணரமைப்பு பணிகள் நிறைவடைந்து அங்கு மீண்டும் ரயில் சேவைகள் தொடங்கப்பட்டது. விபத்தில் உயிரிழந்தவர்கள் பலரின் உடல்கள் அடையாளம் காணமுடியாத நிலையில் உள்ளன. அவற்றை ஒடிசா அரசு பதப்படுத்தி வைத்துள்ளது. இந்நிலையில், விபத்தில் சுமார் 40 பேரின் உடல்களில் எந்த காயங்களோ, ரத்தக் கறையோ இல்லாமல் மரணடைந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர்கள் அனைவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருப்பார்கள் என்று கூறப்படுகிறது. ரயில் பெட்டிகள் ஒன்றோடு ஒன்று மோதி தூக்கி வீசப்பட்ட போது, அவை தண்டவாளத்தின் மேல் செல்லும் மின் கம்பிகளில் உரசி மின்சாரம் பாய்ந்திருக்கும். இதன் காரணமாக இந்த 40 பயணிகள் உயிரிழந்திருப்பார்கள் என ரயில்வே காவல் ஆய்வாளர் பாப்பு குமார் நாயக் தெரிவித்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர்களில் 101 பேரின் உடல் அடையாளம் காணப்படவில்லை. எனவே, இவர்களின் உடல்களை பாதுகாப்பாக பதப்படுத்தி வைக்க பாரதீப் துறைமுகத்தில் இருந்து 5 கண்டெய்னர்களை ஒடிசா அரசு வாங்கியுள்ளது. மேலும், விபத்து குறித்து விசாரணை நடத்த சிபிஐ குழு இன்று காலை சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிக பாதிப்பை சந்தித்துள்ளனர். அம்மாநிலத்தைச் சேர்ந்த 61 பேர் உயிரிழந்துள்ளனர்.