சிறுவர் மற்றும் பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக மட்டக்களப்பில் குழுக் கூட்டம்

மாவட்ட சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி குழுக்கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா தலைமையில் இன்று (10) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இம்மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் சிறுவர் மற்றும் பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக சம்மந்தப்பட்ட அனைத்து அரச நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பான முன்னேற்றங்கள் மீளாய்வு செய்யப்பட்டன. இதன்போது பிரதேச செயலகங்கள், சுகாதார திணைக்களம், கல்வித் திணைக்களம், பொலிஸ் திணைக்களம், முன்பள்ளி கல்விப் பிரிவு, தொழிட் திணைக்களம், அரச சார்பற்ற நிறுவனங்கள், தன்னார்வு தொண்டு நிறுவனங்கள், சிறுவர் நன்நடத்தைப் பிரிவு போன்றவற்றின் உயர் அதிகாரிகள் பிரசன்னமாயிருந்தனர்.

அரசினால் சிறுவர் மற்றும் பெண்கள் வலுவூட்டலுக்காக வழங்கப்படும் உதவிகள் உரிய பயனாளிகளைச் சென்றடைவதையும், அதனை மேற்பார்வை செய்யப்படும் பொறிமுறைகளும் மீளாய்வு செய்யப்பட்டன. மேலும் பாடசாலை இடைவிலகல் மாணவர்களை மீளவும் பாடசாலைகளில் இணைத்தல், பிறப்புப் பதிவுகள் இல்லாத சிறுவர்களது பிறப்புப் பதிவுகளை பெற்றுக் கொடுப்பதில் உள்ள சிக்கல்களைத் தீர்ப்பது தொடர்பாக சம்மந்தபபட்ட அதிகாரிகளுடன் கலந்துரையடல் இடம்பெற்றன.

இதன்போது அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா கருத்து தெரிவிக்கையில் இம்மாவட்டத்தில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், பால்நிலை சார் பிரச்சினைகள், ஆசிரியர் மாணவர் முரண்பாடுகள், சிறுவர்கள் கல்வி கற்கும்போது தொழிலில் ஈடுபடுதல், பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், இளவயது திருமணம் போன்ற பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. இப்பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றுக்கான தீர்வுகளை உடனுக்கடன் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.

இம்மாவட்டத்தில் கற்பினித் தாய்மார்களுக்கான போசாக்குணவு வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 7556 கற்பினித் தாய்மார்கள் உதவி பெறுவதுடன், ஊட்டச்சத்து குறைபாடுடைய பிள்ளைகளுக்கான காலை உணவு வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 06 பிரதேச செயலகப் பிரிவுகளில் 95 முன்பள்ளிப் பிள்ளைகள் 2169 பேர் உதவி பெற்றுக் கொள்கின்றனர்.

இதுதவிர கோவிட் 19 கொரோனா தடுப்பு விசேட வேலைத் திட்டத்தின் கீழ் 184 முன்பள்ளி பாடசாலைகளுக்கு கைகழுவும் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் 110 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 5000 ரூபா கொடுப்பணவு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதுடன் 140 பாலர் பாடசாலைகளுக்கு சுத்திகரிப்பு பொதிகள் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மாவட்ட சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் வீ. குகதாசனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் உதவி மாவட்ட செயலாளர். ஏ. நவீஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. சசிகலா புண்ணியமூர்த்தி, சிறுவர் உள நல வைத்தியர் எஸ். கடம்பநாதன், பிரதேச செயலாளர்கள், வைத்தியர்கள், வலயக்கல்விப் பணிப்பாளர்கள், சிறுவர் நன்நடத்தைப் பிரிவு மற்றும் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், தொழிட் திணைக்களம், பொலிஸ் திணைக்களம் போன்றவற்றின் அதிகாரிகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரச உத்தியோகத்தர்கள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

Sathasivam Nirojan

Leave A Reply

Your email address will not be published.