மட்டு. முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாம் அமைந்திருந்த 8.6 ஏக்கர் காணிகள் விடுவிப்பு!
மட்டக்களப்பு மாவட்டம், கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முறக்கொட்டாஞ்சேனையில் இராணுவ முகாம் அமைந்திருந்த 8.6 ஏக்கர் காணிகள் இன்று விடுவிக்கப்பட்டன.
முறக்கொட்டாஞ்சேனை பிரதான வீதியை அண்மித்த பொதுமக்களின் காணிகள், பாடசாலை காணி, பாடசாலை மைதானக் காணி உள்ளிட்ட 8.6 ஏக்கர் காணிகள் கடந்த 32 வருடங்களாக இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில், அவை இன்று விடுவிக்கப்பட்டன.
களுவங்கேணி – முறக்கொட்டாஞ்சேனை – திருமலை வீதியுடன் இணைக்கும் பாதையும் கடந்த 32 வருடங்களாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தமையால் பொதுமக்கள் பல சிரமங்களை எதிர்கொண்டு மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்தி வந்த நிலையில் குறித்த பாதையும் இன்று திறந்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர், கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் ஆகியோர் முன்னிலையில் கிழக்கு மாகாண இராணுவத் தளபதி காணி விடுவிப்புப் பத்திரத்தை வழங்கி வைத்தார். அதன்பின்னர் தனியார் காணிகள் காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன.
இராமகிருஷ்ண மிஷன் பாடசாலை காணி தொடர்ந்தும் இராணுவத்தின் வசமே உள்ளது.
இன்றைய காணி விடுவிப்பு நிகழ்வில் கிழக்கு மாகாண இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சுஜிப கெட்டியாராட்சி, மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் கலாமதி பத்மராஜா, மாவட்ட (காணி) உதவி அரச அதிபர் நவரூபரஞ்சினி முகுந்தன் மற்றும் கோறளைபற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் எஸ். ராஜ்பாவு, பிரிகேடியர் இரந்த ரத்நாயக்க, முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாம் அதிகாரி, மாவட்ட பொலிஸ் பொறுப்பாதிகாரி மற்றும் காணி உரிமையாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.