விளைநிலத்தில் வைரக்கற்கள் – ஆந்திர விவசாயிக்கு கிடைத்த அதிஷ்டம்
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் விவசாயி ஒருவர் 30 கேரட் வைரத்தை தனது விளைநிலத்தில் இருந்து எடுத்து 2 கோடி ரூபாய்க்கு விற்றுவிட்டதாக கூறப்படும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரப் பிரதேச மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஜொன்னகிரி, துக்கிலி, மடிகேரா, பெகதிராய், பேராபலி, மஹாநந்தி மற்றும் மஹாதேவபுரம் கிராமங்களில் உள்ள வயல் பகுதிகளில் மழைக்கு பின்னர் வைரக்கற்கள் தானாகவே வெளியே வரும் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
2019ம் ஆண்டில் விவசாயி ஒருவர் 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைரத்தையும், கடந்த ஆண்டு 2 விவசாயிகள் 2 விலைமதிப்பற்ற வைர கற்களையும் கண்டுபிடித்து வணிகர்களிடம் நல்ல தொகைக்கு விற்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
வைரம் கிடைப்பதை உறுதி செய்யும் விதமாக சிலர் அன்றாட வேலைகளை ஒதுக்கிவிட்டு, வயல்வெளிகளில் தற்காலிக கூடாரங்கள் அமைத்து தொடர்ந்து வைர வேட்டையில் ஈடுபடும் நிகழ்வுகளும் நாள்தோறும் கண்கூடாகி வருகிறது.
இந்நிலையில் விவசாயி ஒருவர் தனது விளைநிலத்தில் 30 கேரட் வைரத்தை கண்டு எடுத்ததாகவும், அதனை உள்ளூர் வைர வியாபாரியிடம் 2 கோடி ரூபாய்க்கு விற்றுவிட்டதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில் கர்னூல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களுடைய அனைத்து வேலைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு நிலத்தை உழுது வைர வேட்டையில் ஈடுபட்டு அதன் மூலம் கோடீஸ்வரர் ஆகும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
பொதுமக்களுக்கு இயற்கையாகவே கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வைரக்கற்கள் கிடைத்தது பற்றி பரவி வரும் தகவல்கள் உண்மையா என்று போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.