600/600 மதிப்பெண் பெற்ற மாணவியை சந்திக்கும் நடிகர் விஜய்!
தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் எடுத்து மாநிலத்திலேயே முதலிடம் பிடித்த நந்தினி நடிகர் விஜய்யை நேரில் சந்திக்கவுள்ளார்.
10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேரிவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை ஜூன் 17ஆம் தேதி நேரில் அழைத்து பாராட்டி, கல்வி உதவித்தொகை வழங்க நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளார்.
மொத்தமுள்ள 234 சட்டசபை தொகுதிகளில் உள்ள 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற தலா மூன்று மாணவர்கள் வீதம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ – மாணவியருக்கு பரிசு, கல்வி உதவித் தொகை வழங்கவுள்ளதாகவும் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த மாதம் வெளியான 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அனைத்து பாடங்களிலும் 100 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்தில் முதலிடம் பிடித்தார் அரசு உதவிப் பெறும் பள்ளியில் படித்த நந்தினி. அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்துப் பாராட்டினார்.
கவிஞர் வைரமுத்து நந்தினியின் இல்லத்துக்குச் சென்று பேனாவை பரிசளித்து பாராட்டினார். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் நந்தினிக்கு பாராட்டுகளைத் தெரிவித்தனர். ஊடகங்களிலும் நந்தினி நேர்காணல்களை வெளியிட்டன. அதேபோல, விஜய்யும் நந்தினியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், நடிகர் விஜய் சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாணவி நந்தினியை நேரில் சந்தித்து சான்றிதழ் வழங்கி கௌரவிக்கவுள்ளார்.