இந்தியாவில் 10 கோடி பேருக்கு நீரிழிவு நோய்…ஆய்வில் அதிர்ச்சி!
இந்தியாவில் பத்து கோடி பேருக்கும் தமிழ்நாட்டில் ஒரு கோடி பேருக்கும் நீரிழிவு நோய் இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய தேசிய அளவிலான ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இது தான் முதல் முறையாக அனைத்து மாநிலங்களிலும் மக்கள் தொகை அடிப்படையில் விரிவாக நடத்தப்படும் ஆய்வாகும். இந்த ஆய்வு நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், கொழுப்பு, உடல் பருமன் உள்ளிட்ட தொற்றா நோய்களும் அவற்றுக்கான முக்கிய காரணிகளும் மக்களிடம் எவ்வளவு பரவி உள்ளது என்பதை கூறுகிறது.
இந்தியாவில் 11.4% பேருக்கு நீரிழிவு நோய் உள்ளது. நகர்ப்புறங்களில் 16.4% பேருக்கும், கிராமப்புறங்களில் 8.9% பேருக்கும் உள்ளது. தமிழ்நாட்டில் 14.4% பேருக்கு அதாவது சுமார் ஒரு கோடி பேருக்கு நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் நீரிழிவு நோய் அதிகமாக இருக்கும் ஐந்தாவது மாநிலமாக தமிழகம் உள்ளது.
நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில், அதாவது எதிர்காலத்தில் சர்க்கரை நோய் ஏற்படும் அபாயத்தில் இருப்பவர்கள் pre diabetic எனப்படுகிறார்கள். இந்தியாவில் 15.3% பேர் pre diabetic பிரிவில் உள்ளனர். இந்த பிரிவில் கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் வித்தியாசம் இல்லை. நகர்ப்புறங்களில் 15.4% பேருக்கும் கிராமபுறங்களில் 15.2% பேருக்கும் உள்ளது. Pre diabetic பிரிவில் இருக்கும் 60% பேர் சர்க்கரை நோயாளிகளாக மாறுவதால் இது அபாயகரமானது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
தமிழ்நாட்டில் 10.2 % பேர் இந்த பிரிவில் உள்ளனர். அதாவது 80 லட்சம் பேர் உள்ளனர். இந்த ஆய்வில் முக்கிய பங்காற்றிய மெட்ராஸ் டயபடீஸ் ரிசர்ச் பவுண்டேஷன் தலைவர் ஆர் எம் அஞ்சனா கூறுகையில், “இந்தியா முழுவதும் தற்போது பார்க்கையில் கிராமப்புறங்களில் நீரிழிவு நோய் குறைவாக இருக்கிறது. ஆனால் கடந்த பத்து ஆண்டுகளில் கிராமப்புறங்களில் நீரிழிவு நோய் மிக வேகமாக அதிகரித்துள்ளது. அதன் அறிகுறி தான் நகரங்களுக்கு இணையாக கிராமப்புறங்களிலும் pre diabetic பிரிவில் பாதிப்பு ஏற்பட்டிருப்பது. இவர்களில் ஒரு சதவீதம் பேர் சர்க்கரை நோயாளிகளாக மாறினால் கூட அதன் விளைவுகள் மோசமானதாக இருக்கும்” என்றார்.
இந்தியாவில் பொதுவாக நகரமயமாக்கல் அதிகமாக உள்ள வளர்ந்த மாநிலங்களில் வாழ்க்கை முறை காரணமாக சர்க்கரை நோய் அதிகமாக உள்ளது. இது குறித்து நீரிழிவு சிறப்பு மையத்தின் தலைவரும் இந்த ஆய்வின் மூத்த ஆசிரியருமான வி.மோகன் நியூஸ்18க்கு பேட்டி அளித்த போது, “கேரளாவில் நகரமயமாக்கல் காரணமாக நகரம், கிராமம் என்ற வித்தியாசம் இல்லாமல் நீரிழிவு நோய் பரவியுள்ளது. இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தில் 25.5% பேருக்கு அங்கு நீரிழிவு நோய் கண்டறியப்பட்டுள்ளது.
ஜார்கண்ட் போன்ற கிராமப்புற அதிகம் உள்ள மாநிலங்களில் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், உடல் பருமன் ஆகியவை மிக குறைவாக உள்ளது. நாட்டின் பிற பகுதிகளோடு ஒப்பிடும் போது தென் மாநிலங்களில் அரிசி சாப்பிடும் பழக்கத்தாலும் நகரமயமாக்கல் காரணமாகவும் நீரிழிவு நோய் அதிகமாக உள்ளது.” என்று அவர் கூறினார்.
இந்த ஆய்வின் படி, அதிகபட்சமாக கோவாவில் 26.4% பேருக்கும் குறைந்த பட்சமாக உத்தரபிரதேசத்தில் 4.8% பேருக்கு நீரிழிவு நோய் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் 13.6 கோடி பேர் pre diabetic பிரிவில் உள்ளனர். 31.5 கோடி பேருக்கு ரத்த அழுத்தம், 25.4 கோடி பேருக்கு உடல் பருமன், 35.1 கோடி பேருக்கு வயிற்று பகுதி பருமன் இருப்பது தெரியவந்துள்ளது.