பாலியல் வன்கொடுமை வழக்கில் குஜராத் உயர் நீதிமன்றம் கருத்தால் சர்ச்சை

குஜராத் மாநில உயர் நீதிமன்றத்தில் ஒரு பாலியல் வன்கொடுமை குறித்த வழக்கு விசாரணை வந்தது. இந்த வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதி சமீர் ஜேஜ தவே விசாரித்தார். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 17 வயது சிறுமியின் தந்தை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். அந்த சிறுமி பாலியல் வன்கொடுமையால் கர்ப்பமாகியுள்ளார்.
தற்போது சிறுமி 8 மாத கர்ப்பினியாக உள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் 16ஆம் தேதி பிரசவம் நடக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, கருவை கலைக்க அனுமதி வேண்டும் என சிறுமியின் பெற்றோர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். வழக்கை விசாரித்த நீதிபதி தவே, “நாம் இப்போது 21ஆம் நூற்றாண்டில் வாழ்கிறோம். ஆனால், உங்கள் வீட்டில் இருக்கும் அம்மா அல்லது பாட்டியைக் கேட்டு பாருங்கள்.
அந்த காலத்தில் திருமணம் நடைபெறும் அதிகபட்ச வயதே 14 அல்லது 15ஆக இருக்கும். 17 வயதிற்கு முன்பே குழந்தை பிறந்துவிடும். எனவே, 4 அல்லது 5 மாதம் எல்லாம் பெரிய மாற்றத்தை கொண்டுவராது. நீங்கள் மனுஸ்மிருதியை ஒருமுறை படித்து பாருங்கள்” எனத் தெரிவித்தார்.
அத்துடன் சுமார் 7 மாதங்கள் தாண்டிவிட்டதால் கருவை கலைக்க முடியமா என மருத்துவ பரிசோதனை செய்து நீதிமன்றத்திடம் அறிக்கை தர வேண்டும் என ராஜ்கோட் மருத்துவமனை மருத்துவருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சிறுமியின் கர்ப்பம் குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ் இதற்கு ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். இதை விட முட்டாள் தனம் இருக்க முடியுமா என விமர்சித்துள்ளார்.