27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தியாவில் உலக அழகி போட்டி!
27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலக அழகி போட்டி இந்தியாவில் நடைபெறவுள்ளது. MISS WORLD எனப்படும் உலக அழகி போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியானது கடைசியாக இந்தியாவில் 1996-ல் பெங்களூருவில் நடைபெற்றது. இந்நிலையில், 2023-ஆம் ஆண்டுக்கான உலக அழகியை தேர்வு செய்வதற்கான இறுதிப்போட்டி, வரும் நவம்பரில் இந்தியாவில் மீண்டும் நடக்கவுள்ளதாக உலக அழகி போட்டிக்கான அமைப்பின் தலைவர் ஜூலியா மோர்லி அறிவித்தார்.
இதுகுறித்து பேசிய அவர், இந்தியாவில் உலக அழகி போட்டி நடக்கவுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும், ஒரு மாதத்துக்கு நடக்கும் இந்த போட்டியில், 130 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
போலந்தைச் சேர்ந்த கரோலினா தற்போது உலக அழகியாக உள்ளார். உலகில் மிகச் சிறந்த விருந்தோம்பல் கலாசாரம் உடைய நாடு இந்தியா என்று கூறியுள்ள கரோலினா, உலக அழகிப் போட்டி இந்தியாவில் நடக்கவுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.
ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட 6 இந்தியர்கள் இதுவரை உலக அழகி பட்டம் வென்றிருக்கும் நிலையில், கடைசியாக மானுஷி சில்லார் கடந்த 2017ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.