இந்தி மொழி குறித்த கருத்து: ‘ஹிந்தி தெரியாது போடா’ சர்ச்சை
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் நடிகர் சிரீஷும் இந்தி திணிப்பை எதிர்க்கும் வகையில் டீ-ஷர்ட் அணிந்து புகைப்படங்களை வெளிட்டது பரபரப்பான நிலையில், பல்வேறு திரையுலக பிரபலங்களும் இந்தி தொடர்பான தங்களின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி வருகின்றனர்.
விமான நிலையத்தில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர் (சிஐஎஸ்எஃப் – CISF) ஒருவர், தனக்கு இந்தி தெரியாததால் நீங்கள் இந்தியர்தானா என கேள்வி எழுப்பியதாக தனது ட்விட்டர் பக்கத்தில் திமுகவின் எம்.பி கனிமொழி குறிப்பிட்டிருந்தார்.
அதேபோல சில தினங்களுக்கு முன்பு அச்சு இதழ் ஒன்றுக்கு இயக்குநர் வெற்றிமாறன் அளித்த பேட்டியில், இந்தி தெரியாத காரணத்தால் விமான நிலையத்தில் சுமார் 45 நிமிடங்கள் நிற்க வைக்கப்பட்டதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில்தான் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, ‘I am a தமிழ் பேசும் indian’ என்று அச்சிடப்பட்ட டீ-ஷர்ட்டையும், பெருநகர் படத்தில் நடித்த சிரீஷ் ‘ஹிந்தி தெரியாது போடா’ என்ற வாசகம் அச்சிடப்பட்ட டீ ஷர்ட்டையும் அணிந்து, அந்த புகைப்படங்களை தங்கள் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தனர்.
இதையடுத்து பல திரைப்பிரபலங்கள், இந்த விவகாரத்தில் தங்களின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி வருகின்றனர்.
“‘தமிழ் பேசும் அமெரிக்கன்’, ‘தமிழ் பேசும் ஜப்பானியன்’ என்பதுதான் செய்தி. தமிழ் பேசும் இந்தியன் என்பதில் என்ன ஆச்சரியம்? தமிழன் இந்தியன்தானே? தமிழ்மொழி இந்திய மொழிதானே? உங்கள் அரசியலுக்கு எங்கள் மொழியைப் பயன்படுத்தாதீர்கள்” என்று தனது டிவிட்டர் பக்கத்தில் இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார்.
“அருள்”, “கிரி”, “குட்டி” போன்ற படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஆர்த்தி, தொடர்ச்சியாக தனது பதிவுகளில் இந்தி கற்பிப்பதை ஆதரித்து கருத்து தெரிவித்து வருகிறார்.
இயக்குநர் வெற்றி மாறனும் தனது குழந்தையுடன் ‘ஹிந்தி தெரியாது போடா’ என்ற டீ-ஷர்ட்டை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதேபோல நடிகர் சாந்தனு, அவரது மனைவி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நகைச்சுவை நடிகர் கருணாகரன் ஆகியோரும் இந்தி திணிப்புக்கு எதிரான டீ-ஷர்ட்டை அணிந்து, அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான தங்கர் பச்சான் இதுபோல டீ-ஷர்ட் மூலம் தமிழுணர்வை வெளிப்படுத்துவது குறித்து விமர்சித்து எழுதப்பட்ட பத்திரிகை தலையங்களம் ஒன்றை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்ததும் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், “அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும்படி ‘இந்தி தெரியாது போடா’ எனும் செய்தி பரவலாக பேசப்பட்டது. அது குறித்து நாளிதழ் ஒன்றில் 08.09.2020 அன்று தலையங்கம் வெளியாகியிருந்தது அதனை எனது முகநூல் மற்றும் வாட்ஸ் அப்பில் பகிர்ந்திருந்தேன். அதை கவனிக்காமல் அக்கருத்தை என்னுடைய கருத்தாக நினைத்து ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் என்னுடைய படத்துடன் இணைத்து செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு தமிழனாக எனது மொழி, மண், இனம் குறித்த எனது கருத்துக்களை தெரிவிப்பதுடன் எனது படைப்புகளிலும் அதற்கான இடம் அளித்து கணக்கற்ற போராட்டங்களிலும் பங்கேற்றவன் நான். எனவே இவ்வாறான தவறான தகவல்களை இனி எவரும் பகிர வேண்டாம் என்றும் வெளியிட வேண்டாம் என்றும் அனைவருக்கும் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்” என்று கூறியிருக்கிறார்.