தீவிர புயலாக மாறிய பைபர்ஜாய்…எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!
அரபிக் கடலில் மையம் கொண்டுள்ள பைபர்ஜாய் புயல் தீவிரமடைந்துள்ளதால், ஆழ்கடல் மீனவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்புமாறு, கடலோர காவல்படையினர் விமானம் மூலம் சென்று அறிவுறுத்தினர்.
மத்திய கிழக்கு – தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவான பைபர்ஜாய் புயல், அதி தீவிரப் புயலாக வலுப்பெற்று வருகிறது. இந்த புயல், இன்று (ஞாயிற்றுக்கிழமை) மேலும் வலுப்பெற்று, வடகிழக்கு திசையில் நகரக் கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்பிறகு அடுத்த 3 நாட்களுக்கு வடக்கு -வடமேற்கு திசையில் நகரும் என்றும் கணித்துள்ளது.
இதனால், லட்சத்தீவு பகுதிகள், கேரள – கர்நாடக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்றும், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் இந்திய வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், குஜராத்தில் இருந்து புயல் உருவாவதற்கு முன்பு ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, அவர்களுக்கு அறிவுறுத்தும் வகையில், இந்திய கடலோர காவல்படையினர், விமானம் மூலம் சென்று ஒலிப்பெருக்கியில் எச்சரிக்கை விடுத்தனர். அத்துடன், கடல்சார் பணிகளில் ஈடுபட்டுள்ள குஜராத் மற்றும் டாமன் டையு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்ப வேண்டும் என்றும் கடலோர காவல்படையினர் அறிவுறுத்தினர்.