“இது ஒரு நம்பமுடியாத உணர்வு”- 23வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஜோகோவிச் பேட்டி.
பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.
இறுதிப்போட்டியில் நார்வே வீரர் காஸ்பர் ரூடை 7-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி பெற்றார். இதன்மூலம், 23வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி ஜோகோவிச் புதிய சாதனையை படைத்துள்ளார்.
மேலும், ஆடவர் டென்னிஸில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர்கள் பட்டியலில் ஜோகோவிச் முதலிடம் பிடித்தார். 3வது முறையாக பிரெஞ்சு ஓபன் பட்டத்தை ஜோகோவிச் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
23-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற ஜோகோவிச் தனது வெற்றி குறித்து பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “23-வது சாம்பியன் பட்டத்தை வென்றது ஒரு நம்பமுடியாத உணர்வு. பல நம்பமுடியாத சாதனைகளுடன் இங்கு நிற்பதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன். எனது 23வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் எனக்கு கிடைத்திருப்பது தற்செயலானது அல்ல. ஏனென்றால், எனது வாழ்க்கையில் வெற்றி பெறுவது என்பது எனக்கு கடினமான ஒன்றாக இருந்தது. நான் இப்போது மிகவும் உணர்ச்சிவசப்படுகிறேன். எனது வெற்றி குறித்து மிகவும் பெருமைப்படுகிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.