பறவைப் பூங்காவில் சிறுமியின் காதைக் கடித்த cockatoo கிளி – மண்டாய் வனவிலங்குக் குழுமம் முதலுதவி.
மண்டாயில் உள்ள Bird Paradise பறவைப் பூங்காவில் cockatoo வெள்ளைக் கிளியால் கடிக்கப்பட்ட 13 வயதுச் சிறுமிக்கு முதலுதவி வழங்கப்பட்டதாக மண்டாய் வனவிலங்குக் குழுமம் தெரிவித்துள்ளது.
சென்ற வெள்ளிக்கிழமை (9 ஜூன்) பறவைப் பூங்காவில் தமது மகளின் காதை வெள்ளை cockatoo கிளி ஒன்று கடித்ததாக அவரின் தாயார் திருவாட்டி ஸெரீன் சென் (Serene Chen) தமது Facebook பக்கத்தில் கூறியிருந்தார்.
அவர் தமது கணவர், மகள் ஆகிய இருவருடன் பூங்காவிற்குச் சென்றிருந்தபோது அந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறியிருந்தார்.
தமது மகள் வேறொன்றைப் படம் எடுத்துக்கொண்டிருந்தபோது வெள்ளைக் கிளி தோள்பட்டையில் அமர்ந்து அவரின் காதைக் கடித்ததாகத் திருவாட்டி சென் குறிப்பிட்டார்.
மகளின் காதிலிருந்து ரத்தம் விடாமல் கசிந்ததாகவும் அவர்களுக்கு உடனே உதவி வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.
கிளியை விரட்ட முயன்றபோது அது திருவாட்டி சென்னின் விரலைக் கடித்தது.
அது குறித்து விவரமறிய CNA வனவிலங்குப் பூங்காவைத் தொடர்புகொண்டது.
அவர்களுக்கு முதலுதவி வழங்கப்பட்ட பின்னரே அவர்கள் பூங்காவிலிருந்து வெளியேறியதாகக் குழுமம் தெரிவித்தது.
அந்தக் கிளி தற்போது பறவைக்கூடத்துக்கு இடம் மாற்றப்பட்டுள்ளது.
அதற்கு மேலும் பயிற்சியளிக்கப்படும் என்று குழுமம் சொன்னது.
இத்தகையச் சம்பவங்களைத் தவிர்க்கப் பறவைகளிடமிருந்து பாதுகாப்பான தூரத்தைக் கடைப்பிடிக்குமாறு Bird Paradise பேச்சாளர் கூறினார்.
நகை, சாவி, காசு போன்ற பளபளப்பான பொருள்களைத் தவிர்க்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
அவை பறவைகளின் கவனத்தை ஈர்க்கக்கூடியவை என்று அவர் சொன்னார்.
திருவாட்டி சென், அவரின் மகள் இருவரின் நிலையும் தற்போது சீராய் உள்ளது.