பேஷன் ஷோவில் விபத்து…இளம் பெண் மாடல் பரிதாப பலி..!

பேஷன் ஷோ விழாவில் ஒளி வெளிச்சத்திற்காக வைக்கப்பட்ட தூண் சரிந்து விழுந்து இளம் பெண் மாடல் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நொய்டாவில் நிகழ்ந்துள்ளது.

டெல்லி அருகே உள்ள நொய்டாவில் உள்ள பிலிம் சிட்டியில் லக்ஷ்மி ஸ்டுடியோவில் நேற்று பேஷன் ஷோ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல பேஷன் மாடல்கள் கலந்து கொண்டனர். பேஷன் ஷோவுக்கான ஒளி வெளிச்சத்திற்காக அங்கு பிரம்மாண்ட செட் மற்றும் மேடை அமைக்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் பங்கேற்க சுமார் 150 பேர் அங்கு குழுமியிருந்தனர். இந்நிலையில், மதியம் 1.30 மணி அளவில் அங்கு லைட் வெளிச்சத்திற்காக வைக்கப்பட்டிருந்த இரும்பு தூண் திடீரென சரிந்து விழுந்தது. இந்த இரும்பு தூண் அங்கிருந்த 24 வயது மாடல் அழகி வன்ஷிகா சோப்ரா மற்றும் பாபி ராஜ் ஆகியோர் மீது விழுந்துள்ளது.

விபத்துக்குள்ளான வன்ஷிகா மற்றும் பாபி ராஜ் ஆகியோரை அருகே உள்ள கைலாஷ் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். ஆனால், வன்ஷிகாவின் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பாபி ராஜுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் தொடர்பாக நொய்டா காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த பேஷன் ஷோ நடத்த உரிய அனுமதி பெறவில்லை என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், விழாவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் லைட் மேன்கள் 4 பேரை காவல்துறை கைது செய்து விசாரித்து வருகிறது.

சம்பவ இடத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லை. எனவே, விழாவிற்கு வந்தவர்களின் வீடியோக்களை பெற்று அந்த ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ள காவல்துறை முடிவெடுத்துள்ளது. விழாவில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி இளம் மாடல் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.