நாடாளுமன்றத்தைக் கலைத்துத் தேர்தலை உடன் நடத்துக! – சஜித் கட்சி வலியுறுத்து.

“கடந்த வருடப் புரட்சியால் மக்கள் ஆணையை இழந்த நாடாளுமன்றத்தை உடனடியாகக் கலைத்துத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உள்ளோம்” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“கடந்த வருடம் புரட்சி ஒன்று இடம்பெற்றது. அந்தப் புரட்சியின் விளைவாக ஜனாதிபதிப் பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்ச விரட்டப்பட்டார்; பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ச விரட்டப்பட்டார்; நிதி அமைச்சர் பதவியிலிருந்து பஸில் ராஜபக்ச விரட்டப்பட்டார். அமைச்சரவையும் விரட்டப்பட்டத. மொத்தமாக அரசே விரட்டப்பட்டது.
கோட்டாபய சட்டரீதியான ஜனாதிபதி. அப்படி இருந்தும், அவருக்கான அங்கீகாரம் இல்லாமல் போனது.
நாடாளுமன்றத்துக்கும் இதேநிலைதான். இதனால் மக்கள் விரும்புகின்றவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்புவதற்கு மக்களுக்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.
அப்படிப்பட்ட நாடாளுமன்றத்தால்தான் நாட்டைச் சரியாக இட்டுச் செல்ல முடியும். இதனால் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் நிற்கின்றோம்.” – என்றார்.