அரசியல் அனுபவமும் முதிர்ச்சியும் அற்றவர் அண்ணாமலை – இபிஎஸ்
அரசியல் அனுபவமும் முதிர்ச்சியும் அற்றவர் அண்ணாமலை என எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
தமிழ்நாட்டில் அதிமுக, பாஜக கூட்டணி தொடர்ந்து வருகிறது. இருப்பினும், இரு கட்சிகளுக்கு இடையே அவ்வப்போது மோதல் போக்கு நிலவிவருகிறது. இந்தநிலையில் ஆங்கில நாளிதழில் அண்ணாமலையின் பேட்டி வெளிவந்தது. அதில், “தமிழ்நாட்டின் முதல்வர் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட வரலாறு உள்ளது” என்று ஜெயலலிதா குறித்து விமர்சனம் செய்துள்ளார். இது தமிழக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அண்ணாமலைக்கு எதிராக சி.வி.சண்முகம், ஜெயக்குமார் என அதிமுகவின் முன்னணி தலைவர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.இந்த நிலையில் அதிமுக மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் அண்ணாமலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “20 வருடங்களாக எம்.எல்.ஏ இல்லாத பாஜகவுக்கு 4 எம்.எல்.ஏ.க்களை பெற்றுத் தந்தது அதிமுக. வாஜ்பாய், அத்வானி மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் ஜெயலலிதா மீது மரியாதை வைத்துள்ளனர். அண்ணாமலையின் பேச்சு மக்களிடமும், அதிமுகவினரிடையேயும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசிய அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவிக்கிறோம். திட்டமிட்டு உள்நோக்கத்துடன் அவதூறு பரப்பும் கருத்தை அண்ணாமலை பேட்டியாக கொடுத்துள்ளார். அண்ணாமலை கருத்து அதிமுகவினருக்கு மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் அனுபவமும் முதிர்ச்சியும் அற்றவர் அண்ணாமலை” என்று தெரிவித்துள்ளார்.