அமைச்சர் செந்தில் பாலாஜியை பார்க்க அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மத்திய துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்புடன் 5 கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அடையாறு பசுமை வழிச் சாலையில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு, பிஷப் கார்டன் பகுதியில் உள்ள அவரது சகோதரர் தங்கியிருந்த வீடு மற்றும் அலுவலகத்தில் காலையில் சோதனை மேற்கொண்டனர்.
இதற்கிடையே, கரூர் மற்றும் சென்னை வீடுகளில் நடைபெற்று வந்த சோதனை நிறைவடைந்தது. அதிகாலையில் சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக அழைத்துச் செல்வதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை பார்க்க அமலாக்கத்துறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. காரணம் எதுவும் சொல்லாமல் அவரை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.
உறவினர்கள், நண்பர்கள் யாரிடமும் அதிகாரிகள் எதுவும் சொல்லவில்லை. விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டாரா அல்லது கைது செய்யப்பட்டாரா என்பது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. கைது நடவடிக்கை என்றால் அதற்குரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை.
எந்த வழக்குக்காக விசாரணை நடத்தப்பட்டது என்பது தொடர்பாக அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என தெரிவித்தார்.