நெதர்லாந்தில் நீரில் மூழ்கி தமிழ் இளைஞன் உயிரிழப்பு!
நெதர்லாந்தின் உத்ரெக் மாகாணத்தில் அமைந்துள்ள வின்கெவீன்ஸ பிளெசென் (Vinkeveense Plassen) ஏரியில் நீச்சலில் ஈடுபட்டிருந்த தமிழ் இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
அம்ஸ்ரர்டாமில் வசிக்கும் 21 வயதான அனுசன் என்பவரே உயிரிழந்தவர் என்று அம்ஸ்ரர்டாம் தமிழ் வட்டாரங்கள் தெரிவித்தன.
படகுச்சவாரி மற்றும் உதைபந்தாட்ட விளையாட்டுகளில் ஈடுபடுவதற்காக நண்பர்கள் குழு ஒன்றுடன் உத்ரெக்கில் (Utrecht) வின்கெவீன்ஸ பிளெசென் நீரேரிப் பகுதிக்கு வந்திருந்த சமயத்திலேயே திங்கட்கிழமை இரவு ஒன்பது மணியளவில் அவர் நீரில் மூழ்கிக்காணாமற்போனார் என்று தெரிவிக்கப்படுகிறது.
பிரான்ஸின் லூ ஹாவ் நகரில் இருந்த வந்திருந்த நண்பர்களில் ஒருவர் நீரேரியில் சிக்குண்ட வேளை அவரை மீட்டுப் பாதுகாப்பாக வெளியேற்ற முயன்ற சமயத்திலேயே அனுசன் நீரில் மூழ்கிக் காணாமற்போனார் என்று சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறியிருக்கின்றனர்.
ஏரியில் மீட்புப் பணியாளர்கள் நீண்ட நேரம் தேடுதல் நடத்தியபிறகே அவரது உடலைக் கண்டுபிடித்து மீட்டனர் என்றும், கரைக்கு கொண்டுவரப்பட்டு அவசர முதலுதவிச் சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் அவரது உயிரைக் காப்பாற்ற முடியாமற்போனது என்றும் மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸில் இருந்து சென்றிருந்த 25 வயதான இளைஞர் நீரில் இருந்து மீட்கப்பட்ட போதிலும் சுயநினைவு திரும்பாத நிலையில் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அவரது பெயர் விவரங்கள் அறியவரவில்லை.
“மிகவும் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது. அவர்கள் நீய்ச்சல் வீரர்களா, படகு ஓட்டுபவர்களா அல்லது சுழியோடிகளா என்பதை அறிந்து கொள்ள நீண்ட நேரம் எடுத்தது” – என்று உத்ரெக் பிராந்தியப் பாதுகாப்புப் பிரிவின் பேச்சாளர் ஒருவர் செய்தி ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
இளைஞர்கள் ஒர் அணியாகப் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காகவே நீரேரிப் பகுதிக்குச் சென்றிருந்தனர். அந்தச் சமயத்திலேயே இந்த அவலம் நேர்ந்தது என்று நெதர்லாந்துத் தமிழர் தரப்புத் தகவல் ஒன்று தெரிவித்தது.
கடும் வெப்பம் நிலவுகின்ற போதிலும் ஏரியின் தண்ணீர் இன்னமும் கடும் குளிராகவே உள்ளது என்பதால் அங்கு நீச்சலில் ஈடுபடுவோர் குளிரில் விறைத்து உயிராபத்தைச் சந்திக்க நேரிடலாம் என்று பாதுகாப்புப் பிரிவினர் எச்சரித்துள்ளனர்.
சம்பவம் நடைபெற்ற பகுதியை உள்ளடக்கிய De Ronde Venen நகர சபையின் மேயர் உயிரிழந்த இளைஞனது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். “சம்பந்தப்பட்ட இளைஞர்களின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம், மேலும் இந்தக் கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்” – என்று மேயர் மார்ட்டின் டிவெண்டால் (Maarten Divendal) தனது இரங்கல் செய்தியில் கூறியிருக்கிறார்.